மணிபால் குளோபல் கல்வி நிறுவனத்தின் தலைவர் மோகன் தாஸ் பாய் ட்விட்டர் பதிவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்து ஓராண்டை கடந்துள்ள நிலையில், அரசு தொடர்ந்து இந்து விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக பாஜக உட்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக தருமபுர ஆதீனத்தின் பட்டின பிரவேச விழா தொடர்பாக நடைபெற்ற சம்பவங்களில் அரசை கடுமையாக விமர்சித்தனர். இதனையடுத்து அதிகமாக சிக்கியது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தான்.
தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட அணில்கள்தான் காரணம் என அவர் விளக்கமளிக்க அது பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டது. இதனையடுத்து திமுகவின் ஓராண்டு சாதனையை கலாய்க்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மின்வெட்டு பிரச்சனையை குறிப்பிட்டு ட்விட்டரில் கலாய்த்தார். அதற்கு செந்தில் பாலாஜி கடுமையாக பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் மணிபால் குளோபல் கல்வி நிறுவனத்தின் தலைவர் மோகன் தாஸ் பாய் ட்விட்டரில் இன்றைய தினம் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் போஸ்டர் ஒன்றை பதிவிட்டு சர்ச், மசூதிகளில் மின்கட்டணம் மிகக்குறைவாக யூனிட்டுக்கு ரூ.2.85 வசூலிக்கப்படுவதாகவும், கோவில்களில் யூனிட்டுக்கு ரூ.8 வசூலிக்கப்படுவதாகவும் இடம் பெற்றிருந்தது. அதனை குறிப்பிட்டு மக்களே இது உண்மையா? தமிழகத்தில் கோவில்களும், இந்துக்களும் பாகுபாடு காட்டப்படுகிறதா? அப்படியானால் இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி ட்விட்டர் சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளார். அதில் அன்புள்ள ஐயா, பொது களத்தில் தவறான தகவல்களை பதிவிடாதீர்கள். கோவில், மசூதி மற்றும் தேவாலயம் எந்த பாகுபாடுமின்றி பொது வழிபாட்டு தலத்தின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன. பொதுமக்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு குறைந்த பதற்றம் கொண்ட சேவைக் கட்டணம் ரூ. ஒரு யூனிட்டுக்கு ரூ. 5.75, தமிழக அரசு மானியமாக தலா இரண்டு மாதங்களுக்கு முதல் 120 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 2.90. எனவே, செலுத்த வேண்டிய நிகர வரி ரூ. இரண்டு மாதங்களுக்கு முதல் 120 யூனிட்டுகளுக்கு யூனிட்டுக்கு ரூ.2.85 மற்றும் 120 யூனிட்டுகளுக்குப் பிறகு ரூ.5.75 ஒரே மாதிரியாக பில் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் எந்த வகையிலும் வேறுபாடு இல்லாமல் எப்போதும் ஒரே மாதிரியான கட்டண விகிதம் பின்பற்றப்படுகிறது. நீங்கள் கூறியது போல் வழிபாட்டுத் தலங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.8 என்ற விகிதத்தில் கட்டணம் இல்லை. உங்கள் புரிதலுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்