உடல் நல பாதிப்பு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலம் தேறி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி கொடுப்பதாக பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் ஜூன் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து புழல் சிறையில் நீதிமன்ற காவலில் இருக்கும் அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது.
செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை மற்றும் அமலாக்கத்துறை தொடர்பான ஆவணங்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பலமுறை ஜாமீன் கோரிய நிலையில், உச்சநீதிமன்றம் வரை சென்றாலும் அவருக்கு ஆதரவான தீர்ப்பு கிடைக்கவே இல்லை. இதுவரை அவருடைய நீதிமன்ற காவல் 12 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் கிட்டதட்ட 5 மாதங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த நவம்பர் 12 ஆம் தேதி வாந்தி, மயக்கம் காரணமாக முதலில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க அறிவுறுத்தினர். அங்கு இதயவியல்துறை, நரம்பியல் துறை சார்ந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் செந்தில் பாலாஜிக்கு மூளைக்கு செல்லும் நரம்பில் ரத்தக்கட்டி இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே மருத்துவ காரணங்களை காட்டி ஜாமீன் கோரியும், அது கிடைக்கவில்லை.
இந்நிலையில் 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை 6.30 மணிக்கு அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சிறைக்கு வந்து அடுத்த வாரத்துடன் 6 மாதங்கள் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.