திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு:
திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் அவதூறு பரப்புவதாக அண்ணாமலைக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினரான டி.ஆர். பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்காக அடுத்த மாதம் அதாவது ஜுலை 14ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக ஃபைல்ஸ்:
கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி திமுகவின் முக்கிய நிர்வாகிகள், பிரமுகர்களின் ஊழல் மற்றும் சொத்து பட்டியல் என குறிப்பிட்டு திமுக ஃபைல்ஸ் எனும் ஆவணங்களை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு குடும்பத்திற்கு ரூ.10,841 கோடி சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வக்கீல் நோட்டீஸ்:
அண்ணாமலையில் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த டி.ஆர்.பாலு, 48 மணி நேரத்தில் அண்ணாமலை மன்னிப்புக் கேட்க வேண்டும் இல்லையென்றால் ரூ.100 கோடி இழப்பீடு வழங்க வேண்டுமென வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கு தனது வழக்கறிஞர் மூலம் பதிலளித்த அண்ணாமலை, மன்னிப்பு கேட்க முடியாது என்றும் தான் தெரிவித்தக் கருத்தில் உறுதியாக உள்ளதாக பதில் நோட்டீஸ் அனுப்பினார்.
டி.ஆர். பாலு தொடர்ந்த வழக்கு:
அண்ணாமலையின் பதில் நோட்டீஸை ஏற்றுக் கொள்ளாத டி.ஆர். பாலு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17-வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் மனுதாக்கல் செய்தார். அதில், அண்ணாமலை வெளியிட்ட கருத்துக்கள் பொய்யானது. எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கிறது. எனவே, அவதூறு சட்டத்தின் கீழ் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார். அந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது விசாரணைக்காக அடுத்த மாதம் ஆஜராக வேண்டும் என, அண்ணாமலைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, அண்ணாமலை வெளியிட்ட கருத்துகளுக்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, எம்.பி கனிமொழி உள்ளிட்டோரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், விரைவில் திமுக ஃபைல்ஸ் பாகம் இரண்டு வெளியாகும் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதோடு, செந்தில் பாலாஜியின் சிஷ்யனாக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் மாறியுள்ளதாகவும், அண்மைய்ல் நடந்த 36 பேரின் பணியிட மாறுதல்களுக்காக 12 கோடி ரூபாய் அவர் லஞ்சம் வாங்கியுள்ளதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். அதுதொடர்பான விவரங்கள் திமுக ஃபைல்ஸின் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் எனவும் பேசியுள்ளார்.