ஊழல் நடப்பதாக குற்றம் சாட்டிய பாஜக தலைவர் அண்ணாமலை அது தொடர்பாக இன்று ட்வீட் செய்திருந்தார். அதில், அந்த ட்வீட்டில்,  தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர்களுக்கு பல மாதங்களாக எந்தத் தொகையும் வழங்கப்படாமல் திடீரென ரூ.29.64 கோடி வழங்கப்பட்டதற்கு காரணம் என்ன?  இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் சொல்ல முடியுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சில ஒப்பந்ததாரர்களின் பெயர்களையும், அவர்களது வங்கி கணக்கில் போடப்பட்ட பணம் தொடர்பாகவும் ஒரு புகைப்படத்தையும் அண்ணாமலை பகிர்ந்துள்ளார். அந்த ட்வீட்டின் இறுதியில் இந்த வாரம்  அனல், அடுத்த வாரம் சோலார். அடுத்த வாரத்துக்கு பின் தயாராகிக் கொண்டிருக்கும் ‘பெரிய’ நிறுவனம் என அவர் குறிப்பிட்டிருந்தார். 


இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ''மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளதென திரு.அண்ணாமலை கூறியதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்பது தெரியாமல், திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட அந்த Excel கையில் இருந்தும்,அந்த தொகையையும் 29.99 கோடியென சரியாக எழுத கூட தெரியாமல், All purpose அதிமேதாவியாக எண்ணி, 4% கமிஷனென மீண்டும் பொய் புகார் கூறி கழக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தப்பார்க்கும் அண்ணாமலை இதற்கான ஆதாரத்தையும் இன்றே வெளியிடவேண்டும். 




இல்லை, அவர்களது வழக்கப்படி மன்னிப்பு கேட்க வேண்டும். 2021 மார்ச் மாதம் முதல் 06.05.2021 வரை, மின் கொள்முதல், தளவாட கொள்முதல் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு சேர வேண்டிய ரூ. 15541 கோடி நிலுவையில் இருந்தது. அக். 1ல் PFC & REC நிறுவனங்களிடமிருந்து நிதி வந்த பின், தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலகத்தில் நிலுவை தொகைகள் சரி பார்க்கப்பட்டு, அந்தந்த மின் பகிர்மான மற்றும் மின் உற்பத்தி வட்டத்திற்குரிய மேற்பார்வை மற்றும் தலைமை பொறியாளர்கள் அலுவலக வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதுவே வழக்கமான நடைமுறை. எனக் குறிப்பிட்டுள்ளார் .


முன்னதாக, “திமுகவை சேர்ந்தவர், தமிழ்நாடு மின்சார வாரியத்திடமிருந்து ரூ.4000 கோடி முதல் ரூ.5000 கோடி வரையில் ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளார். ஒருவேளை அப்படி நடந்தால் இந்த ஊழல் தொடர்பான ஆவணங்களை ஒவ்வொன்றாக வெளியிடுவோம்” என்று தமிழக மின்துறை அமைச்சர் மற்றும் மின்துறை அதிகாரிகளுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்றைய தினம் எச்சரிக்கை விடுத்தார். அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டுக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தி விளக்கம் அளித்தார்.