தமிழகத்தைப் பொருத்தவரை வடகிழக்கு பருவமழை காரணமாக அதிக அளவும் மழை பெய்வதும், அவ்வாறு சில ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக மழை பெய்யும் போது வெள்ளம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் பாதிப்படைவது வழக்கம். இந்த பாதிப்பு மனிதர்களுக்கு மட்டும் இல்லாமல் கால்நடைகளுக்கும் ஏற்படுகிறது . அதிலும் குறிப்பாக மாடுகளுக்கு மழையால் கோமாரி உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது. மாடுகளுக்கு மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் கோமாரி நோய் தடுப்பூசி, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாநில அரசின் கால்நடைத்துறை மூலம் செலுத்துவது வழக்கம். மாடுகளின் கால் குழம்பு, வாய், மூக்கு பகுதியில், புண்கள் ஏற்படுத்தும் கிருமிகளை கொள்வதற்கும், மாடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இந்த தடுப்பூசி மாடுகளுக்கு செலுத்தப்படுகிறது.



 

தமிழகத்தில், கடந்த, ஒரு ஆண்டுகளுக்கு மேலாக மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்துவதை கால்நடைத்துறை நிறுத்தி வைத்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் பருவ மழை துவங்கி விட்ட நிலையில், நீர் நிலைகள் நிரம்பி வருவதோடு, மேய்ச்சல் நிலங்களில் புற்கள் முளைத்து தண்ணீர் தேங்கி உள்ளது. இதில் மேயும் மாடுகள் கோமாரி நோயின் பிடியில் சிக்கி உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.



 

மாடுகளை காக்க வெளி சந்தையில் தடுப்பூசி 50 mm மருந்தின் விலை சுமார்   500  ரூபாய்க்கு விற்கப்படுகிறது அவ்வாறு வெளியில் வாங்கினால், 10 மாடுகளுக்கு செலுத்தலாம்.  மருத்துவர் கொடுக்க வேண்டிய செலவு உள்ளிட்டவை வைத்து பார்த்தால் ஒரு மாட்டிற்கு செலுத்துவதற்கு சுமார் 100 லிருந்து 150 ரூபாய் வரை செலவாகும். பத்திற்கும் மேற்பட்ட மாடுகள் வைத்திருப்பவருக்கு இந்த மருந்தை பயன்படுத்தி ஊசி போடலாம். ஆனால்  1 அல்லது 2 மாடுகள் வைத்திருக்கும் விவசாயிகளும் 500 ரூபாய் மதிப்புள்ள மருந்து வாங்கி செலுத்த வேண்டிய சூழல் உள்ளது . அதனால் ஒரு மாட்டிற்கு 700 ரூபாய் வரை செலவாகிறது . இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். தமிழகம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகளை துவக்க அரசு உடனடியாக உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.



 

இதுகுறித்து செங்கல்பட்டு சேர்ந்த விவசாயி சக்திவேல் என்பவர் கூறுகையில், முறையாக மாடுகளுக்கு தடுப்பூசி போடாததால் மாடுகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். தன்னுடைய ஒரு மாடும் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்ததாக வேதனையுடன் கூறினார்.  எனவே அரசு உடனடியாக தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்

 

இதுகுறித்து விவசாயி வெங்கடேஷ் என்பவர் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றி காரணம் காட்டி கடந்த ஆண்டு போடவேண்டிய கோமாரி நோய் தடுப்பூசி இதுவரை செலுத்தப்படவில்லை. ஒன்பதாம் மாதம் நடத்தப்பட வேண்டிய தடுப்பூசி முகாம் இதுவரை நடத்தப்படவில்லை. விவசாயின் முக்கிய ஆதாரமாக இருப்பது மாடுகள். மாடுகளுக்கு வரும் பிரதான நோயான கோமாரி, நோய்க்கு எதிரான தடுப்பூசிகள்   இதுவரை வழங்காதது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்தார். 



 

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை மண்டல அலுவலரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, கடந்த ஆண்டு தடுப்பூசி முகாம் நடத்தப்படும் தடுப்பூசி போட்டு விட்டோம். ஆனால் இந்த ஆண்டு மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய தடுப்பூசி இன்னும் வராததால் கால தாமதம் ஆகியுள்ளது என தெரிவித்தார். மத்திய அரசிடமிருந்து தடுப்பூசி வந்தால் மட்டுமே போட முடியும் என தெரிவித்தார். தமிழக அரசு உடனடியாக, இதில் தலையிட்டு தடுப்பூசிகளை மத்திய அரசிடமிருந்து பெற்று மாடுகளை காப்பாற்ற வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.