விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியர் குப்பம் மீனவர் கிராமத்தில் மெத்தனால் அருந்தி 14 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடியாக சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்களை கைது செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி திமுக 20 வார்டு கவுன்சிலரும், அமைச்சர் செஞ்சி மஸ்தான் தீவிர  ஆதரவாளரும் ரம்யாவின் கணவர் மரூர் ராஜா கடந்த  மாதம் பதினெட்டாம் தேதி அன்று மத்திய புலனாய்வு பிரிவு போலீசாரால் வீட்டில் சாராயம் பதுக்கி வைத்து பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்த போது கைது செய்யப்பட்டு 105 லிட்டர் எரி சாராயம், கார் மற்றும் சாராயம் டேக்ஸ் செய்யும் மிஷின்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.


கடந்த மாதம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார்  சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மரூர் ராஜ சாராயத்தை விற்பனையாளர்களுக்கு தருவதற்காக எடுத்து சென்ற போது போலீசார் காரை மறித்து சோதனை செய்தனர்.  சோதனையில் காரின் உள்ளே ஏராளமான சாராய பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து காரில் வந்தவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் திண்டிவனம் நத்தமேடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜா என்கிற மரூர் ராஜா என்பதும், இவரது மனைவி ரம்யா திண்டிவனம் நகராட்சி 20-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்து வருவதும் தெரியவந்தது.


மேலும் மரூர் ராஜர் தனது வீ்ட்டில் சாராயம் தயாரித்து, பின்னர் அவற்றை பாக்கெட்டுகளில் அடைத்து திண்டிவனம் பகுதியில் விற்பனை செய்து வந்ததும், அது போல் தயாரித்த சாராயத்தை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்காக கொண்டு வந்தபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து மரூர் ராஜாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து சாராய பாக்கெட்டுகளுடன் காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரது வீட்டுக்கு சென்று மதுவிலக்கு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 3 கேன்களில் 105 லிட்டர் எரி சாராயம், 9 காலி கேன்கள், சாராய பாக்கெட்டுகள் தயாரிக்க பயன்படும் 6 மெஷின்கள், 2 கிலோ பாலித்தீன் பைகள் இருந்ததை கண்டு பிடித்த போலீசார் அவற்றையும் பறிமுதல் செய்தனர்.


மேலும், அமைச்சர் செஞ்சி மஸ்தானின் தீவிர ஆதரவாளர் எனக் கூறப்படும் மரூர் ராஜ தனது மனைவியை திமுகவில் கவுன்சிலராக வெற்றி பெற வைத்தார். பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் திண்டிவனம் வரும் போதேல்லாம் அவருடன் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்து வந்தார். அதுமட்டும் இல்லாமல் சாராயம் விற்கும் போது போலீசார் கைது செய்ய முற்பட்டால் நான் அமைச்சர் ஆதரவாளர் என கூறி மிரட்டி வந்தார். திண்டிவனத்தில் வெளிப்டையாக சாராயம் விற்பனையை தொடங்கி விற்பனை செய்தார். மேலும் இதனை கண்டித்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பலமுறை இதுபோன்று நடைபெறுவதாக கூறியிருந்தார், போலீசார் கண்டும் காணாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மரக்காணம் எக்கியர் குப்பம் மீனவர் கிராமத்தில் மெத்தனால் அருந்தி 13 பேரும், திண்டிவனத்தில் ஒருவரும்  உயிரிழந்த நிலையில் போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடியாக சாராயம் வியாபாரிகளை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில்,  திண்டிவனம் பிரபல சாராய வியாபாரி மரூர் ராஜவை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.