சிவகங்கை, திருப்பூர், தஞ்சை, நாகை, தூத்துக்குடி, கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது மட்டுமின்றி, அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், நாமக்கல், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  மொத்தம், 16 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று உத்தரவிட்டுள்ளார்.


அதிரடிக்கு மேல் அதிரடி:


நாகை மாவட்ட ஆட்சியராக உள்ள அருண் தம்புராஜ் ஐஏஎஸ், கடலூர் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இணை செயலாளராக உள்ள அன்னே மேரி ஸ்வர்னா, அரியலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக உள்ள தீபக் ஜேக்கப், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


வணிக வரிகள் துறை இணை செயலாளராக உள்ள மெர்சி ரம்யா, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் ஆட்சியராக உமா நியமனம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் ஆட்சியராக கலைச்செல்வி மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு ஆட்சியராக கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


மதுரை ஆட்சியராக சங்கீதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை ஆட்சியராக ஆஷா அஜித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் ஆட்சியராக விஷ்னு சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஆட்சியராக ராகுல்நாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் ஆட்சியராக கிருஸ்துராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


ஈரோடு ஆட்சியராக ராஜ கோபால் சுங்கரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் ஆட்சியராக பூங்கொடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாகை ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி ஆட்சியராக சராயு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து அதிகாரிகளும் மாற்றம்:


தமிழ்நாட்டின் அமைச்சரவையில் சமீபத்தில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதில், தொழில்துறை அமைச்சராக பதவி வகித்த தங்கம் தென்னரசுக்கு நிதித்துறை வழங்கப்பட்டது. நிதித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த பழனிவேல் தியாகராஜனுக்கு ஐடிதுறை ஒதுக்கப்பட்டது.


அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து, பல்வேறு துறை செயலாளர்களும் மாற்றப்படலாம் என தகவல் வெளியான வண்ணம் இருந்தது. குறிப்பாக, முதலமைச்சரின் தனிச் செயலாளரான உதயச்சந்திரன் மாற்றப்படுவார் என தகவல் வெளியானது. கோட்டை வட்டாரத்திலிருந்து வெளியான தகவல்களை உண்மையாக்கும் விதமாக ஐஏஎஸ் பணியிடை மாற்றம் நடந்தது.


முதலமைச்சரின் தனிச் செயலாளரான உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றப்பட்ட நிலையில், அவர் வகித்து வந்த இடத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி முருகானந்தம் நியமிக்கப்பட்டார்.


தலைமை செயலாளராக உள்ள இறையன்பு, ஓய்வு பெற உள்ள நிலையில், அந்த இடத்திற்கு முருகானந்தம் நியமிக்கப்படுவார் என தகவல் வெளியானது. இச்சூழலில், முதலமைச்சரின் தனிச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டார்.