கோயம்பேடு காய்கறி சந்தை வளாகத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

 

கோயம்பேட்டில் ஆய்வு:

 

கோயம்பேடு காய்கறி சந்தை வளாகம் வெளிநாடுகளில் உள்ள காய்கறி சந்தைகள் போன்ற தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  அமைச்சர் சேகர்பாபு உறுதி அளித்துள்ளார். 


சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று (04/02/2023)  சி.எம்.டி.ஏ. சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் காய்கறி சந்தையில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு வியாபாரிகளிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


குப்பைகள் அகற்றம்:

 

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஆய்வினை முடித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு,  சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் கடந்த மாதம் 8ம் தேதி மலர்கள் அங்காடியில் ஆய்வு மேற்கொண்டு வியாபாரிகள் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினோம். இதனை தொடர்ந்து இன்று காய்கறி சந்தைகள் உள்ள ஆயிரத்து 985 கடைகள் அமைந்துள்ள பகுதியில் ஆய்வு மேற்கொண்டோம் என அவர் கூறினார். 

”குப்பைகள் அகற்ற காலதாமதம் ஏற்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு நாளில் 2 முறை குப்பைகள் அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். திருவிழா காலங்களில் அதிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு குப்பைகள் அகற்றவும். மற்ற நாட்களில் 2 முறை குப்பைகள் அகற்ற நடவடிக்கை கோரிக்கை வைத்துள்ளனர். மேலும்,  சர்வீஸ் சாலைகளை அசுத்தமாக பயன்படுத்த முடியாமல் உள்ளது அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என அவர் கூறினார். 

 

பயோ கேஸ் ஆலை

”கோயம்பேடு காய்கறி சந்தையில் சேதமடைந்த இடங்களை சரி செய்ய நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்தமுள்ள 3 ஆயிரத்து 941 கடைகள் வெளிநாடுகளில் உள்ள மார்க்கெட்டுகள் போல் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்தடுத்து பழங்கள் அங்காடி, உணவு தானிய அங்காடி, பேருந்து நிறுத்தம் போன்ற பகுதியில் ஆய்வு மேற்கொண்டு கோயம்பேடு காய்கறி மார்க்கெட் பகுதி பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் கூறியுள்ளார். 

”கோயம்பேடு வளாகத்தில் 8 ஏக்கர் அளவில் பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும். கோயம்பேடு சந்தையில் சேகரிக்கப்படும் காய்கறி கழிவுகளை சென்னை மாநகராட்சி சார்பில் சேத்துப்பட்டில் உள்ள பயோ கேஸ் ஆலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். கோயம்பேடு சந்தையில் பயோ கேஸ் ஆலை  அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி முடிவு எடுக்கப்படும்” எனவும் அமைச்சர் சேகர் பாபு கூறினார். 

மேலும், “அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கோயம்பேடு காய்கறி சந்தை பகுதியில் கழிவறைகள் ஒரு வார காலத்திற்குள் முழுமையாக சுத்தம் செய்யப்படும். போக்குவரத்து நெரிசல் பிரச்சனை சரி செய்யப்படும், விழா காலங்களில் கூடுதலாக காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.