ஒப்புதல் படிவம் பெற ஈபிஎஸ் திட்டம்:


ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி சார்பில் போட்டியிடும் தென்னரசுக்கு ஆதரவாக, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரிடம் இருந்தும்  ஒப்புதல் படிவம் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒப்புதல் படிவம் வழங்கி, நாளை இரவுக்குள் அதிமுக தலைமை கழகத்தில் ஒப்படைக்க மாவட்ட தலைமைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதற்காக சென்னை தவிர பிற மாவட்டங்களில்  மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மூலம்  பொதுக்குழு உறுப்பினர்களுக்கு  இன்று படிவம் விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த பொதுக்குழு உறுப்பினர்களால் பூர்த்தி செய்யப்படும் இந்த ஒப்புதல்  படிவங்களை,  திங்கட்கிழமை அன்று உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில்  சமர்பிக்க, எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளது.


உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு:


முன்னதாக, இரட்டை இலை சின்னத்தை தனது தரப்புக்கு ஒதுக்க வேண்டும் என, எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,  ”பொதுக்குழு கூடி வேட்பாளரை முடிவு செய்யுமென்றும், பொதுக்குழுவின் முடிவை அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. அவைத்தலைவரின் பரிந்துரையின் பேரில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் எனவும், பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரையும் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்நிலையில், அதிமுகவின் பொதுக்குழுவை கூட்ட வேண்டுமானால், அக்கட்சி விதிகளின் படி 15 நாட்களுக்கு முன்னதாக உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால், இடைத்தேர்தலுக்கு குறுகிய காலம் மட்டுமே இருப்பதால் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட சாத்தியமில்லை. இதன் காரணமாக, ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக நேரடியாக பொதுக்குழு உறுப்பினர்களிடமிருந்து, ஒப்புதல் படிவம் பெற எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளது.