மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரத்ததானம் செய்தார். தொடர்ந்து மதுரை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பல இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இயற்கை எரிவாயு நிலையத்தை திறந்து வைத்தார்.
ரத்த தானம்:
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,"சட்டமன்றத்தில் கடந்த நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட 110 அறிவிப்புகள் அடுத்த நிதியாண்டுக்குள் நிறைவேற்றப்படும். ராஜாஜி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை தென்னக மக்களுக்கு மிகச் சிறப்பான மருத்துவ சேவையை ஆற்றி வருகிறது. 60 வயதான நான் 70 முறைக்கு மேல் ரத்ததானம் செய்துள்ளேன்.
10 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் ரத்த தானம் கொடுப்பதில் முதலிடத்தில் இருந்தது. தற்போது தமிழகம் பின்தங்கி மேற்குவங்கம் முதலிடத்தில் உள்ளது. மீண்டும் ரத்த தானம் கொடுப்பதில் தமிழகம் முதலிடத்திற்கு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 2 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரேடியோ ஃப்ரீகுவன்சி சாதனம் நிறுவப்பட்டு உள்ளது.
மேலும் Computerrised blood donar app என்ற பிரத்யேக கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டு ரத்த தானம் செய்வோரை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்டு உள்ளது. குருதிக்கொடை தருபவர்களை ஊக்கப்படுத்த உற்சாகப்படுத்த இந்த செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம், தமிழக அரசின் 14 கோரிக்கைகள் தொடர்பான மனுவை அளிக்கப்பட்டது.
2028ம் ஆண்டுக்குள் எய்ம்ஸ்:
அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக தொடங்கிட வேண்டும் என மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் டோக்கியோவில் உள்ள ஜெய்கா அலுவலகத்திற்கு சென்று ஜெய்கா நிறுவன துணைத்தலைவரை சந்தித்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைவாக நிதி ஒதுக்க வேண்டுகோள் விடுத்தோம். ஒன்றிய அரசின் ஒருங்கிணைப்பில் குழப்பம் இருந்துள்ளது. அதனால் நிதி ஒதுக்குவதில் பிரச்சனைகள் இருந்துள்ளன. மதுரை எய்ம்ஸ்க்கான டெண்டர் 2024க்குள் முடிந்துவிடும். மருத்துவமனை கட்டிடம் கட்டி முடிக்க 4 ஆண்டுகள் ஆகலாம் என தெரிவித்துள்ளனர். 2028க்குள் எய்ம்ஸ் வர வாய்ப்புள்ளது. கோவை வளர்ந்து வரும் நகரம். கோவை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெய்க்கா நிதி உதவி இல்லாமல் ஒன்றிய அரசே நேரடியாக நிதி ஒதுக்க டேராடூன் மாநாட்டில் மத்திய அமைச்சரிடம் கோரியுள்ளோம்.
மதுரை எய்ம்ஸ்க்கு மத்திய அரசும் அப்போதைய ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தாமல் ஜெய்க்கா மூலம் நிதி ஒதுக்கி தற்போது மதுரை எய்ம்ஸ் பணிகள் தாமதமாகிறது. எதிர்காலத்தில் நிச்சயமாக மத்திய அரசு நிதி பங்களிப்பில் கோவை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் நடைபெறும் என நம்புகிறோம். மதுரை எய்ம்ஸ்க்கான நிதி பங்களிப்பை மத்திய அரசு கொடுத்திருந்தால் நிச்சயம் அடிக்கல் நாட்டும் பணியோடு நின்று இருக்காது. நாட்டின் வளர்ச்சியை தடுப்பவர்கள் எதிரி என ஆளுநர் ரவி பேசியது குறித்த கேள்விக்கு, நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் ஆளுநரை தான் எதிரியாக பார்க்கிறார்கள் என பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்