பெண்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்க, ஆண்களுக்கு டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் உண்மையில்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்


தமிழ்நாட்டில் இயங்கும் அரசு பேருந்துகள் பெண்களுக்கு இலவச பயணத்தை வழங்குகிறது. இருப்பினும், இழந்த பணத்தை ஈடுசெய்ய, டிஎன்எஸ்டிசி பேருந்து சேவைகளைப் பயன்படுத்துவதற்காக ஆண்களுக்கு 5 ரூபாய் கூடுதலாக வசூலிக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. பெண்களுக்கு இலவச பயணத்தை அனுமதிக்கும் வகையில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களிடமிருந்து குறைந்தபட்சம் ரூ .10 வசூலிக்கப்படுகிறது. தங்கள் தினசரி பயணத்திற்கு பேருந்தை தவறாமல் பயன்படுத்துபவர்கள், அரசுப் போக்குவரத்துக் கழகம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கி வருவதால், கூடுதல் செலவுகளை ஈடுகட்ட ஆண் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றம் சாட்டினர்.




இது குறித்து அதிமுகவும் கேள்வி எழுப்பியது. பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் எனக் கூறிவிட்டு ஆண்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதா? என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பன்னீர்செல்வம் மேலும் கூறுகையில், “குறைந்தபட்ச கட்டணமாக 5 ரூபாய் என்று இருந்த நிலையில் தற்போது  10 ரூபாய் வசூலிப்பதா?. மகளிருக்கான இலவச பேருந்து பயணத்தால் ஏற்படும் இழப்பை ஆண்கள் தலையில் சுமத்துவதை தடுத்து நிறுத்துங்கள். இந்த கட்டண வசூல் அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தெரிந்து நடக்கிறதா? தெரியாமல் நடக்கிறதா?. புதிய யுக்திகளை அரசுப் போக்குவரத்து கழகங்கள் கடைப்பிடிப்பது அரசாணைக்கு எதிரான செயலாகும். முதலமைச்சர் உடனடியாக இதில் தலையிட்டு ஆண்கள் தலையில் சுமத்தப்படும் இழப்பை தடுக்க வேண்டும்” என்று கூறினார்.


இது குறித்து செய்தியாளர்களிடன் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், ''மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவையால் நாள்தோறும் 30 லட்சம் பெண்கள் பயன் பெற்று வருகின்றனர். பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 60% உயர்ந்துள்ளது. பெண்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்க, ஆண்களுக்கு டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் உண்மையில்லை'' என்றார்.