விழுப்புரம்: திண்டிவனத்தில் ஃபெஞ்சல் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஓமந்தூர், உப்பு வேலூர் உள்ளிட்ட ஆறு கிராம மக்கள் நிவாரணம் வழங்கவில்லை என கூறி திண்டிவனம் புதுச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

கிராம மக்கள் நிவாரணம் வழங்கவில்லை என கூறி தொடர் சாலை மறியல்

 

விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக 240 க்கும் மேற்பட்ட மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றன. திண்டிவனம், வானூர் போன்ற பல்வேறு இடங்களில் புயல்  நிவாரண உதவித்தொகை வழங்கவில்லை என கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். சாலை மறியலுக்கு பிறகு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட கிராமங்களுக்கு நிவாரணம் வழங்கபட்டு வருகின்றன.


 

திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு 

 

இந்நிலையில் திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஓமந்தூர் பகுதியில் மழை, வெள்ள பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி ஓமந்தூர், உப்புவேலூர், கிளியனூர், அருவப்பாக்கம், வடசிறுவலூர், ஆதனப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த  பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

 

பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டாததால் அதன் பின்னர் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நிவாரணம் வழங்கப்படுமென அறிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு சென்றனர். மறியல் காரணமாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

 

இதேபோல், செஞ்சி அடுத்த வடபுத்துார் கிராம மக்கள் வெள்ள நிவாரணம் கேட்டு அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர்  காலை 11:45 மணியளவில் செஞ்சி - திண்டிவனம் சாலையில் களையூர் கூட்ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற செஞ்சி டி.எஸ்.பி., கார்த்திகா பிரியா, காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் வருவாய்த் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், மாவட்ட ஆட்சியரிடம் பேசி வெள்ள நிவாரணம் பெற்று தருவதாக உறுதியளித்தனர். அதனையேற்று, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தொடர்ந்து, வானூர் அருகே பெரிய கொழுவாரியில் மழையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கும் மழை நிவாரணம் வழங்க வேண்டும் எனக்கூறி அப்பகுதி மக்கள், பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்துவந்த கோட்டக்குப்பம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


மரக்காணம் ஒன்றியம் கோவடி கிராம மக்களுக்கு நேற்றுவரை நிவாரணம் வழங்கவில்லை. அதனை கண்டித்து அப்பகுதி மக்கள் காலை 10:00 மணிக்கு, புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், திண்டிவனம் வட்டாட்சியர் சிவா மற்றும் கிளியனுா போலீசார், உரிய கணக்கெடுப்பு நடத்தி விரைந்து நிவாரணம் வழங்குவதாக உறுதி அளித்தார்.

 

இதே போல் பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் மழை நிவாரணம் கிடைக்கவில்லை என கூறி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கங்கே போக்குவரத்து பதிப்பு ஏற்பட்டுள்ளது.