விழுப்புரம்: அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட தமிழ்நாட்டு அரசு இளைஞரிடையே வேலைவாய்ப்பின்மைச் சிக்கலைத் தீர்க்கவும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் நீட்ஸ் திட்டம். அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம். யூ.ஒய்.ஈ.ஜி.யி. திட்டம். பி.எம்.ஈ.ஜி.பி. திட்டம் மற்றும் பி.எம்.எஃப்.எம்.ஈ திட்டம் ஆகிய சுயவேலைவாய்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இவையல்லாமல் தையல் தொழில், தச்சு. மண்பாண்டம் வனைதல், நகை செய்தல், அழகுக் கலை உள்ளிட்ட 25 வகை கைத்திறத் தொழில் புரியும் எல்லா வகுப்பினரும் 25% மானியம் மற்றும் 5% வட்டி மானியத்துடன் ரூ.3 இலட்சம் வரை கடனுதவி பெறத்தக்க கலைஞர் கைவினைத் திட்டத்தையும் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
மேற்குறித்த திட்டங்கள் யாவும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் மாவட்டத் தொழில் மையம் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்புறச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஃபெஞ்செல் புயல், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர்க்கு உடனடி நிவாரணம் வழங்கியதோடு நில்லாமல் அவர்கள் தம் வாழ்வாதாரத்தினை மீட்டெடுக்க உதவ வேண்டியதன் அவசியத்தினை உணர்ந்துள்ள தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின் படி, விழுப்புரம் மாவட்டத்தில் சுயவேலைவாய்ப்புத் திட்டங்களின் கீழ் கடனுதவி பெறுவதற்கான விழிப்புணர்வு மற்றும் விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
17.12.2024 அன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தினுள் உள்ள மாவட்டத் தொழில் மையம் மற்றும் அரசூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், 19.12.2024 அன்று அரகண்டநல்லூர் பேரூராட்சி அலுவலகத்திலும் 20.12.2024 அன்று விக்கிரவாண்டி பேரூராட்சி அலுவலகத்திலும் இத்தகைய முகாம்கள் நடத்தப்படவுள்ளன. ஆர்வமும் தேவையும் உள்ளோர் பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ, கல்விச் சான்றிதழ், வகுப்புச் சான்றிதழ், ஊரகச் சான்றிதழ், விலைப்புள்ளிகள். திட்ட அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பங்களைப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விண்ணப்பங்கள் உரிய வங்கிகளுக்கு அனுப்பப்பட்டு தகுதியின் அடிப்படையில் கடனும் மானியமும் வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலான விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விழுப்புரம் அவர்களை நேரடியாகவோ 04146-223616/ 8925534035/ 9443728015 ஆகிய எண்கள் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.