செந்தில்பாலாஜிக்கு சிறையில் எவ்வித சிறப்பு சலுகையும் வழங்கவில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, “சிறையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எவ்வித சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை. முதல் வகுப்பு சிறைக்கைதிகளுக்கான வசதிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார். 


மேலும் பேசிய அவர், “அம்பேத்கர் படம் தொடர்பான பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. முதலமைச்சர் அறிவுறுத்தலின்பேரில் நேற்று இரவு 8 மணியளவில் தலைமை நீதிபதியை சந்தித்து கலந்தாலோசித்தேன். அதற்கு தலைமை நீதிபதி அம்பேத்கர் படம் உள்ளிட்ட எந்த புகைப்படங்களையும் நீதிமன்றங்களில் இருந்து அகற்ற எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இதுதொடர்பாக முதல்வருக்கு எடுத்து சொல்லிவிடுங்கள் எனக்கூறினார்” எனத் தெரிவித்தார். 


விலைவாசி உயர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, “ஒரு ஆண்டில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் விலைவாசி உயர்வு என்பது வாடிக்கைதான். ஆனால் விலைவாசி உயராத அளவு தமிழக அரசு கட்டுக்குள் வைத்திருக்கிறது. ஒருசிலர் காய்கறிகளை பதுக்குவதாக தகவல் கிடைக்கிறது. அது சரிசெய்யப்படும்”  என்றார்.