காவல்துறையில் பணியாற்றிய போது தன்னை கொல்ல நடந்த நிகழ்வுகளை முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


1987 ஆம் ஆண்டு காவல்துறையில் பணியை தொடங்கிய சைலேந்திரபாபு, தமிழ்நாடு காவல்துறை டிஜிபி பதவியில் இருந்து கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். அவர் ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில், காவல்துறையில் இருந்த காலக்கட்டத்தில் தனக்கு வந்த கொலை மிரட்டல், முயற்சிகள் பற்றிய அதிர்ச்சியான தகவல்களை தெரிவித்துள்ளார். 


கடலூர் சம்பவம் 


அவர் தனது உரையில், “முன்னாடி ஒரு காலத்தில் நான் தீவிரவாதிகளுடன் சண்டை போட்டுள்ளேன். அந்த குரூப்பில் இருந்தவர்கள் என்னை கொல்ல திட்டம் போட்டிருந்தார்கள். ஒருமுறை நான் கடலூர் மாவட்டத்தில் இருந்தேன். அங்க எஸ்.பி.க்கான வீடு ரொம்ப பிரமாதமா இருக்கும். ஆங்கிலேயர் காலத்து வீடு, கதவை திறந்தாலே கடல் தான் என அமைக்கப்பட்டு இருக்கும். அங்கு தேவனாம்பட்டினம் என்ற ஊர்  மீனவ கிராமம் தான் என்பதால் அங்குள்ள மீனவர்கள் என்னுடன் காலையில் நடைபயிற்சிக்கு எல்லாம் வருவார்கள்.


அப்படி ஒருநாள் நான் வேலை முடித்து வந்த போது ஒரு நபர் என்னிடம் வந்து பேப்பர் ஒன்றை கொடுத்தார். அதை படித்தால், அதில் இன்றைக்கு உன் பையன் வீட்டுக்கு வரமாட்டான் என எழுதியிருந்தது. அப்போது என் பையன் எல்.கே.ஜி படித்துக் கொண்டிருந்தான்.  நான் பயந்து போய் ஒரு போலீஸை அனுப்பி மகனை அழைத்து வந்தேன். ஆனால் அன்றைக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. இப்படித்தான் மிரட்டல் கடிதம் எல்லாம் எழுதுவார்கள். 


வீரப்பனை பிடிக்க நடந்த ஆபரேஷன்


திருச்சியில ரவுடிகளை பிடித்தபோது தினமும் போன் பண்ணி மிரட்டுவாங்க. சும்மா வெட்டுவேன், கொல்லுவேன் என சொல்வாங்க. ஆனால் நேர்ல வந்தா எதுவும் பண்ண தைரியம் இருக்காது. என்னுடைய அம்மா இதெல்லாம் பாக்குறப்ப பயப்படுவாங்க. மனைவி பயப்படமாட்டாங்க. 2000 ஆம் ஆண்டில் நான் அடையாறு துணை கமிஷனராக பணியாற்றுகிறேன். அந்த சமயம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் முதலமைச்சராக இருந்தார். 


அந்நேரம் வீரப்பனை பிடிக்க என்னை அனுப்பினார். எனக்கு டிஐஜி ப்ரோமோஷன் வர வேண்டிய நேரம் அது. தகவலை கேள்விப்பட்டதும் என்னுடைய அம்மா போன் பண்ணி, ”நீ போகக்கூடாது, வீரப்பன் நிறைய பேரை கொன்னுட்டான். அவன் உன்னைய சுட்டுடுவான்’ என சொன்னார். ஆனால் நான் என்னையெல்லாம் வீரப்பன் கொல்ல முடியாது. அவனை விட எனக்கு ஷார்பா சுடத் தெரியும். ஒருவேளை எனக்கு முன்னாடி முந்திக்கிட்டார்ன்னா தெரியாது


அதேசமயம் எனக்கு ஒரு பயம் இருந்தது. வீட்டுக்கு வர்றப்ப வாகன விபத்துல அடிபட்டு இறக்க சான்ஸ் இருந்துச்சே தவிர, காட்டுக்குள்ள என்னை கொல்ல முடியாது ”என அம்மாவை சமாதானம் செய்து சென்றேன். எனக்கு நீச்சல்  செல்வராஜ் என்பவர் தான் கற்றுக் கொடுத்தார். அவரை  தான் வீரப்பன் முதலில் சுட்டுக் கொன்றார். வீரப்பன் தொடர்பான ஆபரேஷனில், காவல்துறையினர் ஏராளமானோர் இறந்தனர். ஆனால் அதிகாரிகள் தைரியமாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ளும் மனநிலையில் உள்ளனர். 


எனக்கு நானே பாதுகாப்பு


எங்க வீட்டுல எனக்கு பாதுகாப்புக்கு போலீஸ் கிடையாது. எனக்கு நானே பாதுகாப்பு, என்னிடம் ஒரு துப்பாக்கி இருக்கும். வீரப்பன் ஆபரேஷனில் ஜல்லிப்பாளையம் மாதையன் என்பவரை கைது செய்தோம். அவர் ஊர் காரங்க எல்லோரும் என்னை கொல்ல வீட்டைச் சுற்றி வலம் வந்தார்கள். ஒருமுறை நான் சென்னைக்கு வெளியே செங்கல்பட்டு கிழக்கு சரகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது காட்டான் சுப்பிரமணியம் என்ற ரவுடியை கைது பண்ணிட்டோம்.


அதுக்கு அடுத்த நாள் என் வீட்டுக்கு ரவுடிகள் வந்தார்கள். அப்போது வீட்டுக்கு பால் பாக்கெட் போட வந்த நபரை கூட்டிச் சென்று அடித்து சாக்கடையில் தூக்கிப் போட்டி போய் விட்டார்கள். வீட்டில் என் மனைவி மட்டுமே இருந்தார். நான் செண்ட் தாமஸ் மவுண்டில் மீட்டிங்கில் இருந்தேன். காட்டான் சுப்பிரமணியனின் அடுத்த லைனில் இருக்கும் குட்டி குட்டி ரவுடிகள் தான் இந்த சம்பவத்தை செய்தார்கள் என பின்னால் தெரிய வந்தது” என அந்த நேர்காணலில் பல அதிர்ச்சியான விஷயங்களை சைலேந்திரபாபு கூறியுள்ளார்.