கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அரசு சார்பில் விழா நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நலத்திட்ட உதவிகள்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட 25வது வார்டில் புதிதாக 25.6 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவை திறந்து வைத்த தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி, முதலமைச்சர் ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்த அமைச்சர், கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக சென்னையாக இருந்தாலும் சரி, திருக்கோவிலூராக இருந்தாலும் சரி, விழுப்புரமாக இருந்தாலும் சரி வளர்ச்சி அடைந்து வருகிறது என பேசிக்கொண்டிருந்தார்.
”எங்கள் பகுதி குறையாக இருக்கிறது; வாயை மூடு”
அப்போது கூட்டத்தில் இருந்த மூதாட்டி ஒருவர், எங்கள் பகுதி குறையாக இருக்கிறது என தெரிவித்தார். இதனால் கோபமடைந்த அமைச்சர் மேடையில் இருந்தபடியே குறையாக இருக்கிறதா? வாயை மூடு என பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர், அருகில் இருந்தவர்கள் மற்றும் நிர்வாகிகள் மூதாட்டியை அமைதிப்படுத்தியதை அடுத்து அமைச்சர் பொன்முடி மீண்டும் பேசத் தொடங்கினார்.
”விரைவில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்”
பின்னர் நீங்கள் என்ன கேட்க வருகிறீர்கள் என எனக்குத் தெரிகிறது. ஆயிரம் ரூபாய் எப்போது தருவீர்கள் என்பது தானே என்று கூறி, அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் விரைவில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும், வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தெரிவித்தார்.
ஏற்கனவே, இலவச பயண டிக்கெட் தொடர்பாக அமைச்சர் பொன்முடி சர்ச்சையாக பேசிய விவகாரத்தில், குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், மீண்டும் தற்போது சர்ச்சையாக பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.