திங்கள்கிழமை அமைச்சர் பொன்முடி வீடு உட்பட அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை தரப்பில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடைபெற்ற நிலையில், அமைச்சர் பொன்முடி ஆழ்வார்பேட்டையில் இருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்துள்ளார். அமலாக்கத்துறை சோதனையின் போது என்ன நடந்தது மற்றும் விசாரணை தொடர்பாக முதலமைச்சரிடம் விளக்கம் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2006-2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் கனிம வளத்துறை அமைச்சராக செயல்பட்ட பொன்முடி, விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் தனது சொந்த பட்டா நிலத்தில் உள்ள செம்மண்ணை அள்ளுவதற்கு அரசின் அனுமதி கோரி விண்ணப்பித்தார். பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி பெயரில் விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் மிக குறுகிய காலக்கட்டத்துக்குள் அனுமதி வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் பொன்முடியின் உறவினர்களும் மண் அள்ள அனுமதி பெற்றிருந்தனர்.
செம்மண் எடுத்தது தொடர்பாக பொன்முடி, கௌதம் சிகாமணி, ராஜமகேந்திரன், லோகநாதன், சதானந்தன், கோதகுமார், ஜெயச் சந்திரன், கோபிநாத் ஆகிய 8 பேர் மீது 2012 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் நீதிமன்றம் அனைவரையும் விடுவித்தது.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப்பட்டது. அதேசமயம் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஜூன் 19 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நீதிபதி ஜி.சந்திரசேகரன், விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து விட்டார்.
இதற்கிடையே அமலாக்கத்துறையினர் நேற்றைய முன் தினம் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் மற்றும் எம்.பியுமான கௌதம் சிகாமணி வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர், 13 மணி நேர சோதனைக்கு பின் இருவரும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதிகாலை 3 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மீண்டும் நேற்றைய தினம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி நேற்று மாலை 4 மணியளவில் இருவரும் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர். 6 மணி நேர தொடர் விசாரணையில் ஆம் இல்லை என்ற அடிப்படையில் அமைச்சர் பொன்முடியிடம் 100 கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விசாரணை முடித்து சுமார் 10 மணியளவில் வெளியே வந்த அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம் சிகாமணியும் வீடு திரும்பினர்.
இந்நிலையில் இன்று காலை அமைச்சர் பொன்முடி தனது வழக்கமான பணிகளை தொடர்வதற்கு முன் ஆழ்வார்ப்பேட்டையில் இருக்கு முதலமைச்சர் இல்லத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்தார். அமலாக்கத்துறை சோதனை மற்றும் இரண்டு நாள் தொடர் விசாரணை தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.