தமிழக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில், அவரை குற்றவாளி என அறிவித்து 3   ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


வழக்கு பின்னனி:


2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011 ஆம் ஆண்டு அதாவது அதிமுக ஆட்சியின்போது அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் சூப்பிரண்டு கன்னியப்பன் இந்த வழக்கைத் விசாரித்து வந்தார். இந்த வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சியும் ரூ.1.75 கோடிக்கு மேல் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களைக் குவித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.



இந்த வழக்கு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான போதிய ஆதாரம் இல்லாததால் இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது.


இந்த தீர்ப்பை எதிர்த்து 2017 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு டிசம்பர் 19 ஆம் தேதி நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “ மனைவியில் வருமானத்தை அமைச்சர் பொன்முடியின் வருமானமாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவிக்கு சொந்தமாக 110 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. தனியாக வணிகமும் செய்து வருவதால் அதன் மூலம் கிடைக்கும். இவற்றை எல்லாம் அதிகாரிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படும் இந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை” என பொன்முடி தரப்பில் வாதிடப்பட்டது.


இதனை தொடர்ந்து வருமானத்திற்கு அதிகமாக 60.49%  அதாவது ரூ. 1.75 கோடி சொத்து சேர்த்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபணம் ஆகியுள்ளது என கூறி நீதிபதி ஜெயசந்திரன் உத்தரவு பிறப்பித்தார். மேலும் இன்று தண்டனை விவரங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.  இந்நிலையில் இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரில் ஆஜரானார்கள். வழக்கு விசாரணையின் போது, வயதைப்கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவ காரணங்களையும் கணக்கில்கொள்ள வேண்டும் என்றும் பொன்முடி தரப்பில் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வாதம் முன்வத்தார். 


இதனை கேட்ட நீதிபதி ஜெயசந்திரன், பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பின், மேல்முறையீட்டுகாக 30 நாட்கள் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  உச்ச நீதிமன்றம் சென்று, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடையை இந்த 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில் அவரது அமைச்சர் பதவி மற்றும் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளதால் உயர்கல்வி துறை, வேறு அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பாக அல்லது புதிய அமைச்சருக்கு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


Watch Video : "முதல்ல ஊரு தான்.. அப்புறம்தான் சினிமா எல்லாம்” - வெள்ள மீட்பு பணியில் தீவிரம் காட்டும் மாரி செல்வராஜ்..!