இயக்குநர் மாரி செல்வராஜ் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்ட வீடியோக்கள் இணையத்தில் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றுள்ளது.
வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் அதீத கனமழை பெய்தது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. அனைத்து இடங்களிலும் மழை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பரிதவித்து போயினர். தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகம் என அனைத்தும் முழுவீச்சில் களம் கண்டாலும் மக்களை மீட்பதில் மிகப்பெரிய சிரமம் ஏற்பட்டது.
தண்ணீர் அளவு கூடிக்கொண்டே சென்ற நிலையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. இதில் ஶ்ரீவைகுண்டம் பகுதியில் இருக்கும் மக்களை தொடர்பு கொள்ளவே முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த பகுதியில் இயக்குநர் மாரி செல்வராஜ் வீடு அமைந்துள்ளது. அவர் உடனடியாக மீட்பு பணியில் தன் ஊர் மக்களுடன் இணைந்து தீவிரமாக ஈடுபட்டார்.
மேலும் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் மீட்பு படகுகளால் கூட ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர் , பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர் ,குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா ஆகிய 20 கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை. இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள் என தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் மாரி செல்வராஜின் ஊர் பகுதியில் உள்ள வெள்ள பாதிப்பை பார்வையிட வந்தார். அப்போது வெளியான புகைப்படங்கள் மாரி செல்வராஜ் உதயநிதியின் வலதுகரம் போன்று செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், “மீண்டும் சென்னை போனாதான் நான் இயக்குநர். இது என் ஊரு என் மக்கள். நான் இயக்குநராக இல்லாவிட்டால் கூட இப்படித்தான் மக்களை மீட்டிருப்பேன். வெளியூரில் உள்ள மக்கள் அம்மாவை காணும், அப்பாவை காணும், எங்க ஊரு என்ன ஆச்சுன்னே தெரியலைன்னு சொல்றப்ப அதுமட்டும் தான் எனக்கு தெரியுது” என பதிலடி கொடுத்திருந்தார்.
உண்மையில், மாரி செல்வராஜ் சொல்வது மாதிரி வெளியூரில் வசித்தாலும், எத்தகைய பெரிய இடத்தில் இருந்தாலும் சொந்த ஊருக்கு ஒன்று என்றால் ஓடிவந்து உதவுபவர்கள் ஏராளம். ஆனால் களத்தில் இறங்குபவர்கள் எத்தனை பேர்? அதில் மாரி செல்வராஜ் மட்டும் விதிவிலக்கா என்ன? - பப்ளிசிட்டிக்காக பண்ணுகிறார் என்பவர்கள் எல்லாம் அவர் சொல்வது மாதிரி களத்தில் வேலை செய்தால் தான் புரியும். உதவிக்கரம் நீட்டாவிட்டாலும் பரவாயில்லை. இதுபற்றி களத்தில் நிஜமாகவே இறங்கி நிற்கும் நபர்களை இகழ்வதை நிறுத்த வேண்டும் என்பது தான் இணையவாசிகள் கருத்தாக உள்ளது. தான் புகழ்பெற்ற இயக்குநர் ஆனாலும் தன் மக்கள் படும் துன்பத்தை கண்டு பொறுக்க முடியாமல் மாரி செல்வராஜ் களத்தில் இறங்குவார் என அந்த ஊர் மக்கள் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.