மயிலாடுதுறையில் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள்துறை தொடர்பான வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 138 உற்பத்தியாளர்கள் குழுக்களுக்கு 2.76 கோடி ரூபாய் கடனுதவியும் 442 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 15.50 ரூபாய் கோடி கடனுதவிகளையும் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், பெண்களின் முன்னேற்றத்திற்காக முதன்முதலில் தருமபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தை முத்தமிழ் அறிஞர் கலைஞர் கொண்டு வந்தார். சமூக நலத்துறையில் இருந்த மகளிர் சுயஉதவி குழு பிரிவை ஊரக வளர்ச்சித்துறையோடு இணைத்தவர் கலைஞர். அவர் வழியிலேயே தமிழக முதல்வர் பெண்களின் வளர்ச்சியில் முனைப்போடு பல்வேறு திட்டங்கள் வாயிலாக பெண்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சென்ற ஆண்டு மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 300 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 303 கோடி கடன் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 500 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்ற ஆண்டு மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 20,000 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 21,260 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 25,000 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை அமைச்சர் சந்தித்தார். அப்போது ஊராட்சிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளை விட தற்போது குறைவான நிதி வருவதாக ஊராட்சி மன்ற தலைவர்கள் கூறுவதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ஆவேசம் அடைந்த அமைச்சர் பெரிய கருப்பன், தமிழகத்தில் நிதித்தட்டுப்பாடு என்பது முற்றிலுமாக இல்லை. தற்போது நிதி நிலைமை முழுவதும் சீராகிவிட்டது, எதுவாக இருந்தாலும் ஆதாரத்துடன் கூறுங்கள் என்றவர், தொடர்ந்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதில் அளிக்காமல், ஒளிப்பதிவை நிறுத்துங்கள் என கூறி பத்திரிகையாளர் சந்திப்பை பாதியில் நிறுத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அரசு முதன்மை செயலாளர் அமுதா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் திவ்யதர்ஷினி, கூடுதல் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் மணிஸ், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்