தமிழகத்தில் ஃப்ளூ காய்ச்சலுக்கு மருந்து இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறுவதில் அரசியல் உள்ளது - அவரை நேரில் அழைத்து வாருங்கள் அவருடன் சேர்ந்து ஆய்வு செய்யலாம் என்று கரூரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். 


 




 


 


கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கரூர் மாவட்டத்தில் ரூ. 4.70 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 15 ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலைய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணைமேயர் தாரணி சரவணன் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். 


 




 


 


அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘’தமிழ்நாட்டில் 8713 துணை சுகாதார நிலையங்கள், 2286 நகர்ப்புற மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் 1000 சுகாதார நிலைய கட்டடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. 1500 சுகாதார நிலையங்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. இவைகளை மாற்றி அமைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், மாவட்டம் தோறும் புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.


தமிழ்நாட்டில் போலி மருத்துவர்கள், அனுமதிக்கப்படாத மருந்துகளை விற்பனை செய்யும் மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  கடந்த வாரத்தில் மட்டும் மூன்று போலி மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்பட்ட மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, குளித்தலையில் ரூ. 40 கோடி மதிப்பில் மேப்படுத்தப்பட்ட தலைமை மருத்துவமனை என இரண்டு தலைமை மருத்துவமனை கட்டடம் ரூ.50 கோடி மதிப்பில் விரைவில் துவங்கப்பட உள்ளது.


 




 


தமிழகத்தில் இதுவரை எந்த ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்பு கடிக்கும், நாய் கடிக்கும் மருந்துகள் இருப்பு இருந்ததில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் இருந்து இந்த இரண்டு வகையான மருந்துகளும் போதுமான அளவு இருப்பு உள்ளன.


தமிழகத்தில் ஃப்ளூ காய்ச்சலுக்கு மருந்து இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறுவதில் அரசியல் உள்ளது. எடப்பாடி பழனிசாமியை நேரில் அழைத்து வாருங்கள் அவருடன் சேர்ந்து ஆய்வு செய்யலாம். தமிழகத்தில் இதுவரை 8 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.  இன்னும் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்ட உள்ளன. 20 ஆயிரம் முகாம்கள் என்பது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத ஒன்று’’ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


Join Us on Telegram: https://t.me/abpdesamofficial