கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர பூக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் காவல்துறை பாதுகாப்புடன் பொக்லைன் உதவியுடன் அகற்றப்பட்டது. வாழ்வாதாரம் பாதிப்பதாக பூ கட்டி விற்பனை செய்யும் பெண்மணி கண்ணீர் வடித்தனர்.


 




கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் பகுதியில் திருச்சி சாலையில், சாலையின் இரு பக்கமும் தள்ளுவண்டி கடைகள், பூக்கடைகள் ஆக்கிரமித்து செயல்பட்டு வந்தன. போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி அங்கு வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை பாதுகாப்புடன் அகற்றினர்.


 




 


அப்பகுதியில் பூக்கடைகளே அதிகளவில் இருந்ததால் அவற்றை அகற்ற வேண்டும் என முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், அவை அகற்றப்படாததால் பொக்லைன் உதவியுடன், மாநகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர். 


 





 


அப்போது, ஒரு சில வியாபாரிகள் அதிகாரிகளின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க இருப்பதாகவும், அதற்காக தற்காலிக சாலையோர கடைகளை அகற்றுவதாகவும், ஏற்கனவே ஒரு இடத்தில் நிழற்குடை அமைக்க பணிகள் துவங்கிய நிலையில், அங்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது இங்கு அமைக்க அதிகாரிகள் முனைவதாகவும் அப்பகுதியினர் குற்றம்சாட்டினர். பூக்கடையை அகற்றுவது வாழ்வாதாரத்தை பாதிப்பதாக தெரிவித்து பெண்மணி ஒருவர் கண்ணீர் மல்க அதிகாரிகளிடம் புலம்பினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.