டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்கள் திரும்ப பெறப்படுவது, இதுவரை 9 மாவட்டங்களில் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். 

 

காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறுதல்:


 

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறுவது சம்பந்தமாக (23.07.2024 அன்று) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

சென்னை உயர் நீதிமன்ற ஆணைப்படி டாஸ்மாக் நிறுவனத்தால் காலி புட்டிகளை திரும்பப் பெறும் திட்டம் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15.05.2022 முதல் அமல்படுத்தப்பட்டது. மற்ற மலை சார்ந்த பகுதிகளில் 15.06.2022 முதல் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து இதர மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்து இதுவரை மொத்தமாக 9 மாவட்டங்களில் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

நீதிமன்றம் உத்தரவு:


 

மேலும் இத்திட்டத்தினை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தும் பொருட்டு மண்டலங்கள் வாரியாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் காலி புட்டிகள் மூன்றாம் நபரிடம் செல்லாமல் இருப்பதற்காகவும், காலி புட்டிகள் உடைக்கப்படாமல் மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கே சென்றடைய வேண்டுமென்ற நோக்கத்துடனும்,  காலி புட்டிகளை மதுபான உற்பத்தி நிறுவனங்களே திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டி நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதனடிப்படையில் ஏற்கனவே கோரப்பட்டிருந்த ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டது.

 

மேலும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் நடவடிக்கையாக மதுபான உற்பத்தி நிறுவனங்களை அழைத்து காலி புட்டிகளை அவர்களே சேகரம் செய்ய வேண்டுமென்ற பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மதுபான உற்பத்தியாளர்களும் காலி புட்டிகளை திரும்ப பெறுவது குறித்து இசைவு தெரிவிக்க சிறிது கால அவகாசம் கேட்டுள்ளனர்.

 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு:


 

சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு காலி புட்டிகளை திரும்பப் பெறும் திட்டம் மாண்பமை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலுடன் வருகிற அக்டோபர் மாதத்திற்குள் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

”ஏன் பழனிச்சாமி இதை சிந்திக்கவில்லை”


 

வயல்களிலும் சாலைகளிலும் பூங்காக்களிலும் காலி மதுப்பாட்டில்கள் வீசப்படுவதை தடுப்பதற்காகத்தான் திராவிட முன்னேற்றக் கழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

10 ஆண்டுகால ஆட்சியில் ஏன் பழனிச்சாமி இதை சிந்திக்கவில்லை. இப்பொழுது குற்றச்சாட்டுகள் சொல்லக்கூடியவர்கள் அந்த 10 ஆண்டு காலத்தில் இதை நடைமுறைபடுத்தியிருக்கலாமே. காலி பாட்டில்கள் வயல்களிலும் பொது இடங்களிலும் வீசப்பட்டதால் அந்த நேரத்தில் விவசாயிகளும் பொதுமக்களும் எவ்வளவு கடுமையாக பாதிக்கப்பட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. 10 ஆண்டு காலமாக அவர்களது ஆட்சிக் காலத்தில் அரசுக்கு வரவேண்டிய வருவாய் என்ன ஆனது என்று கேட்க வேண்டியுள்ளது என அமைச்சர் முத்துசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.