Madurai aiims: ”கேட்ட எல்லாத்தையும் கொடுத்துட்டோம்.. மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் 2024ல் தொடங்கும்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. 

Continues below advertisement

நிலத்தை வழங்கிவிட்டோம்..

அதற்கு பதிலளித்த அவர், ”கடந்த 2019-ம் ஆண்டு மதுரைக்கு நேரடியாக வந்து பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது, அ.தி.மு.க. தலைமையிலான அரசு கட்டுமானப் பணிக்கு 200 ஏக்கர் நிலத்தை வழங்கியது. மத்திய அரசு சார்பில் கூடுதலாக 22 ஏக்கர் நிலம் கேட்கப்பட்டது. அதன்படி, அந்த நிலமும் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், நாடாளுமன்றத்தில் நிலம் வழங்க தாமதம் ஏற்பட்டதால் தான் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளது ஏற்கக்கூடியது அல்ல. முதலமைச்சர் ஸ்டாலின் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் கட்டி முடிக்கவேண்டும் என்று பிரதமரிடம் நேரிலும், கடிதம் மூலமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

2024ல் கட்டுமான பணி:

இதேபோல, கோயம்பத்தூரிலும் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். மதுரையை தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு நிதி வழங்கியது. ஆனால், தமிழகத்துக்கு மட்டும் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் நிதி ஆதாரம் வழங்கும் என்று கூறினார்கள். கடந்த வாரம் நான் ஜப்பான் சென்றபோது ஜைக்கா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டேன். அப்போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதியை விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தினேன். கூட்டத்தில், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 2024-ம் ஆண்டு இறுதியில் தொடங்கி 2028-ம் ஆண்டு இறுதியில் தான் முடியும் என்று கூறியுள்ளார்கள். இது தான் உண்மை நிலவரம். மருத்துவமனை வேலை முடிந்துவிட்டது என்று மத்திய அரசு கூறுவது சரியானது இல்லை. இதேபோல, ஆண்டுக்கு 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் வரை புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். சுற்றுச்சூழலால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளை தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என மா.சுப்பிரமணியன் கூறினார்.

காயமடைந்தவர்களுக்கு ஆறுதல்:

முன்னதாக, சென்னை சைதாப்பேட்டை திவான் பாஷ்யம் தெருவில் உணவு சமைக்கும் கூடத்தில் இருதினங்களுக்கு முன்பாக ஏற்பட்ட, தீ விபத்தில் காயமடைந்த 5 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உரிய சிகிச்சைகலை வழங்குமாறு மருத்துவர்களை வலியுறுத்தினார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ”2 பேருக்கு 2 சதவீதம், 2 பேருக்கு 40 சதவீதம், ஒருவருக்கு 32 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. 5 பேருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்” என கூறினார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola