தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஈரோடு இடைத்தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான அ.தி.மு.க. வேட்பாளரான தென்னரசுவை ஆதரித்து வரும் 19-ந் தேதி மற்றும் 20-ந் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
தமிழ்நாட்டின் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று ஈரோடு கிழக்குத் தொகுதி ஆகும். இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.
பிரதான வேட்பாளர்களாக காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசும் உள்ளனர். அ.ம.மு.க. சார்பில் சிவபிரசாத்தும், தே.மு.தி.க. சார்பில் ஆனந்தும், நாம் தமிழர் சார் மேனகாவும் களமிறங்குகின்றனர்.
வாக்குப்பதிவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த தொகுதியில் முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்திற்காக முற்றுகையிடத் தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக தி.மு.க.வினர் மற்றும் காங்கிரசார் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்களும், அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்தான், அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக அண்ணாமலை வரும் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் பரப்புரையில் ஈடுபட உள்ளார். அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி தனித்தனியே 5 நாட்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
மேலும், அ.ம.மு.க.விற்கு ஆதரவாக டிடிவி தினகரனும், நாம் தமிழருக்கு ஆதரவாக சீமானும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக கமல்ஹாசன் வரும் 19-ந் தேதி ஈரோட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். முக்கிய தலைவர்களும், பிரபலங்களும் ஈரோட்டை முற்றுகையிட்டுள்ளதால் அங்கு இடைத்தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
அ.தி.மு.க.வில் வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பு ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். மோதல் வலுத்ததும், ஓ.பன்னீர்செல்வம் சார்பில் செந்தில்முருகன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் பின்னர் அவர் திரும்ப பெறப்பட்டதும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பல்வேறு அரசியல் நிகழ்வுகளுக்கு பிறகு அ.தி.மு.க. வேட்பாளராக தென்னரசு களமிறங்குகிறார்.
மேலும் படிக்க:Erode East By Polls : ’ஈரோடு காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனா ? சஞ்சய் சம்பத்தா ?’ கன்பியூஸ் ஆன வாக்காளர்கள்..!
மேலும் படிக்க: cm letter: ”நாங்க தயார், நீங்க வேகமா செயல்படுங்க” - மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின்