சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சை கருவிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கடந்த 2 ஆண்டுகளாக புதிய தொழில்நுட்பங்கள், கட்டமைப்பை மேம்படுத்துவது என மருத்துவத்துறையில் ஏராளமான பணிகள் நடைபெற்றுள்ளன. புற்றுநோயை துல்லியமாக கண்டறியக்கூடிய பெட் சிடி ஸ்கேன் சென்னை மற்றும் மதுரையில் மட்டுமே இருந்தது. புற்றுநோய் பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஈரோடு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் புற்றுநோய் பரிசோதனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் முழுமையாக அனைத்து பொதுமக்களையும் புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. காஞ்சிபுரத்தில் ரூ.220 கோடி மதிப்பில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் கட்டப்பட்டு வருகிறது. அந்த மையம் இன்னும் 8 மாதங்களில் நிறைவடையும். புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அவர்களை குணப்படுத்த முடியும் என்பதால் அதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பெட் சிடி ஸ்கேன் அமைக்க ரூ.12 கோடி செலவாகிறது. கடந்த 2 ஆண்டுகளில் திருநெல்வேலி, தஞ்சாவூர், கோவையைத் தொடர்ந்து சேலத்தில் பெட் சிடி ஸ்கேன் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் ஒரு மாதத்திற்கு 300 பேர் வரை பரிசோதனை செய்து கொள்ள முடியும். பெட் சிடி ஸ்கேன் பரிசோதனை செய்ய ரூ.6500 முதல் ரூ.11 ஆயிரம் வரை அரசு மருத்துவமனைகளில் செலவாகும். முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக செய்து கொள்ளலாம்.  தனியார் மருத்துவமனைகளில் ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது" என்றார்.


 


தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் 1..44 கோடி குடும்பங்கள் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் 9 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் 90 சதவீதம் பேர் காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் ஜனவரி 3-வது வாரத்தில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடத்தப்படும். முழுமையாக இருதய பரிசோதனை செய்யும் கேத் லேப் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.நடப்பாண்டில் சென்னை, சேலம், திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்களில் ரூ.6 கோடி மதிப்பாலன கேத் லேப் அமைக்கப்படுகிறது. சேலத்தில் தொடங்கப்பட்டுள்ள கேத் லேப் மூலம் சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறலாம். ரூ.34 கோடி மதிப்பில் ரோபாட்டிக் புற்றுநோய் சிகிச்சை கருவி ஓமந்தூரார் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.


 


தமிழகத்தில் மருத்துவத்துறை புதிய கட்டமைப்புகளுடன் புதுப்பொலிவு பெற்று வருகிறது. ஆனால் ஒரு சிலர் சமூக வலைதளங்கள் வாயிலாக வதந்தி பரப்பி வருகின்றனர். ஒரு சில விஷமிகள் வதந்தி பரப்பி வருகின்றனர். மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் அரசு மருத்துவமனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பொறுக்க முடியாமல் இதுபோன்ற வதந்தி பரப்புவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். 5 வருடங்களுக்கு முன்பு வந்த தகவல் கூட இப்போதும் நாள்தோறும் வதந்தி பரப்பப்படுகிறது. ஒட்டுமொத்த மக்களும் அரசு மருத்துவமனை சேவையை பயன்படுத்தும் நோக்கில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையை நோக்கி பொதுமக்கள் வருவதை தடுக்கும் வகையில் இதுபோன்று வதந்தி பரப்பப்படுகிறது. நாள்தோறும் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து, அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. அரசு மருத்துவ சேவை பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளத் தொடங்கி அரசு மருத்துவமனை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். சமூக வலைதள விஷமிகளின் நோக்கம் நிச்சயம் நிறைவேறாது" என்று தெரிவித்தார்.