நேற்று சேலத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என். நேரு தொண்டரை தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கல்லை வீசிய அமைச்சர்:


மொழிப்போர் தியாகிகள் தின நிகழ்ச்சி ஏற்பாடுகளை நேரில் பார்வையிடச் சென்ற அமைச்சர் நாசர், அங்கே இருந்த கட்சித் தொண்டர்களிடம் அமர்வதற்கு நாற்காலி எடுத்து வரச் சொன்னார். ஆனால், நாற்காலியை எடுத்து வரச்சென்ற தொண்டர்கள் நாற்காலியை எடுத்து வர தாமதமாகியுள்ளது. இதனால், காத்திருந்த அமைச்சர் நாசர் கோபம் அடைந்துள்ளார்.


கோபத்தின் உச்சிக்கே சென்ற அமைச்சர் நாசர் தான் ஒரு அமைச்சர் என்பதையும் மறந்து, அங்கே கீழே கடந்த கல்லைத் தூக்கி தொண்டர் ஒருவர் மீது வீசினார். மேலும், கல்லைத் தூக்கி வீசிய அமைச்சர் நாசர் அந்த தொண்டரிடம், “ போய் சேர் எடுத்துட்டு வா போ.. ஒரு சேர் எடுத்துட்டு வா… யார்ட.. போடா..” என்று கூறுகிறார்.


இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அங்கே நின்றவர்கள் சிலர் வீடியோவாக எடுத்துள்ளனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.


தள்ளிவிட்ட அமைச்சர்:


இந்த சம்பவம் அடங்குவதற்கு முன் இதேபோல் ஒரு சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தலைவாசல் பகுதியில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் கே.என். நேரு உடனிருந்தார். தொண்டர்கள் அனைவரும் அமைச்சர் உதயநிதிக்கு சால்வை கொடுத்து வரவேற்பு அளித்தனர்.


அப்போது தொண்டர் ஒருவர் சால்வை கொடுத்து அமைச்சருக்கு கை கொடுக்க முயன்றார். இதை பார்த்த அமைச்சர் கே.என்.நேரு ஆத்திரமடைந்து அந்த தொண்டரை சட்டை பிடித்து இழித்து ஓங்கி அறைந்து கீழே இறக்கிவிட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வளைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதற்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ” நேற்று கல்வீச்சு, இன்று இந்த சம்பவம்.. எங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டேக் செய்துள்ளார்.