சமீப காலமாகவே, தமிழ்நாடு அரசுக்கும் மாநில ஆளுநருக்கும் இடையே தொடர் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கமம் ஒருங்கிணைப்பாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு என்றழைக்கப்படாமல் தமிழகம் என்றே அழைக்கப்பட வேண்டும் என தெரிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தாண்டின் முதல் கூட்டத்தில் மாநில அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த பல்வேறு கருத்துக்களை வாசிக்காமலும் பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட பெயர்களைத் தவிர்த்தது திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மோதலின் உச்சக்கட்டமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோதே ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார்.
இதை தொடர்ந்து, ஆளுநர் மாளிகை பொங்கல் நிகழ்ச்சிக்கான தமிழ் அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என எழுதப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசின் சின்னம் இடம்பெறவில்லை.
இதன் காரணமாக, திமுக கூட்டணி கட்சிகள், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவை புறக்கணித்தனர். பிரச்னை விஸ்வரூபம் எடுக்க, ஆளுநர் மாளிகை குடியரசு தின தேநீர் விருந்துக்கான அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற சொல் மீண்டும் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இருப்பினும், இந்த தேநீர் விருந்தை காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. இதை கடுமையாக விமர்சித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை விசிக புறக்கணிப்பதால் டீ செலவு மிச்சம் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "தமிழ்நாடு அரசின் நிதியுதவியில் நடத்தப்பட்ட நிகழ்விற்கான விருந்தினர் பட்டியலைப் பார்த்ததில் மகிழ்ச்சி.
கலாசார நிகழ்ச்சிகள், தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் மற்றும் பொது ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டன என்று நம்புகிறேன். தொடர்ச்சியான முன்னேற்றமே இலக்காக இருக்க வேண்டும்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த தேனீர் விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்டார்.
கடந்த ஆண்டு, சித்திரை நாளை முன்னிட்டு அரசியல் கட்சிகளுக்கு தமிழ்நாடு ஆளுநர் ரவி தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், இந்த விருந்தை ஆளும் திமுக, காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஐஎம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.
அப்போதும் ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக கூட்டணியினர் புறக்கணிப்பதால் டீ செலவு மிச்சம், மக்கள் வரிப்பணம் கொஞ்சம் மிச்சமாகிறது என அண்ணாமலை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.