Minister Gingee Masthan: அமைச்சர் செஞ்சி மஸ்தான் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சர் மஸ்தானுக்கு புதிய பொறுப்பு:
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15வது பொதுத் தேர்தலில், விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் ப.சேகர் அவர்கள் மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட காரணத்தால் விழுப்புரம் வடக்கு மாவட்டம் மாவட்ட அவைத்தலைவர் பொறுப்புக்கான தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, இப்பொறுப்புக்கு போட்டியிடுவோர் அதற்கென உள்ள படிவத்தில் முறைப்படி பூர்த்தி செய்து 2024, ஜூன் 17 (திங்கட்கிழமை) அன்று ரூ.25000/வீதம் தலைமைக் கழகத்தில் அளித்து இரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி விழுப்புரம் வடக்கு மாவட்டம், மாவட்ட அவைத்தலைவர் பொறுப்புக்கு செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்த காரணத்தால், அவரது மனு ஏற்கப்பட்டு. விழுப்புரம் வடக்கு மாவட்டம், மாவட்ட அவைத்தலைவராக, திரு.செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு:
விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி கே.எஸ். மஸ்தான் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக திண்டிவனம் ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவர் அப்பதவியில் நியமிக்கப்பட்டார். மூத்த அமைச்சர் பொன்முடி உடனான மோதல் போக்கு மற்றும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் முறையாக களப்பணியாற்றாதது ஆகிய காரணங்களால் மஸ்தானின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
மஸ்தானின் குடும்ப அரசியல்:
கட்சியில் உள்ளடி அரசியல் என்பதை தாண்டி, விழுப்புரம் அரசியல் மற்றும் நிர்வாகத்தில் அமைச்சர் மஸ்தான் குடும்பத்தினரின் தலையீடே அவரது பதவி பறிப்புக்கு காரணமாக கருதப்படுகிறது. இதனை உணர்த்தும் விதமாகவே செஞ்சி மஸ்தானின் மைத்துனர் ரிஸ்வான் வகித்து வந்த விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அவரை தொடர்ந்து அதோடு, விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார் அலி மஸ்தானும் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அந்த வரிசையில் மஸ்தானின் சகோதரர் காஜா நஜீர் வகித்து வந்த பேரூர் கழக செயளாளர் பதவியும் பறிக்கப்பட்டது. அடுத்தடுத்த பதவி பறிப்புகளால் அமைச்சர் செஞ்சி மஸ்தான் திட்டமிட்டு ஓரங்கட்டப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் தான் அவர் விழுப்புரம் வடக்கு மாவட்டம், மாவட்ட அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.