கர்நாடகா மேகதாது அணையை கட்ட சாத்தியக்கூறு இல்லை என மத்திய அமைச்சர் கூறியதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.


மேகதாது அணை விவகாரம் தொடர்பாக  டெல்லியில் ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழ்நாடு அனைத்து கட்சிக் குழு இன்று சந்தித்தது. இந்த சந்திப்புக்கு பின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், சுமார் 45 நிமிடத்திற்கு மேலாக மத்திய அமைச்சருடன் பேசினோம். மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி கொடுக்கக் கூடாது என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினோம். இந்த அணைக்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கை முழுமையாக இல்லை என்றும், மத்திய அரசின் நிபந்தனைகளை கர்நாடகா பூர்த்தி செய்யவில்லை எனவும் மத்திய அமைச்சர் கூறினார்.


மேலும், கர்நாடகா மேகதாது அணையை கட்ட சாத்தியக்கூறு இல்லை என மத்திய அமைச்சர் கூறியதாக தெரிவித்த துரைமுருகன், அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எந்த வகையிலும் மத்திய அரசு துணை போகக்கூடாது என்று கூறினார்.


மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கப்படாது என்றும், அணைக்கு எப்போதும் அனுமதி கிடைக்காது எனவும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் உறுதி அளித்ததாகவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார். மேகதாது அணை கட்ட காவிரி பாயும் அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்பும் தேவை என்றும் கூறினார்.


 




தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவிற்கும் இடையே நீண்ட காலமாக காவிரி நீர் பங்கீடு குறித்த பிரச்சினை உள்ளது. இந்த நிலையில், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் அணை கட்டுவதற்கு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சூழலில், கடந்த 12ஆம் தேதி மேகதாது அணை விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக சென்னை, தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., உள்ளிட்ட 13 சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.


உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியின் கீழ்படுகை மாநிலங்களின் முன் அனுமதியை பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப்பணியையும் மேற்கொள்ள கூடாது. அதை தற்பொழுது மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது. இத்திட்டத்தினால் தமிழ்நாடு விவசாயிகளுக்கு தேவையான நீர் கிடைப்பது பாதிப்படையும். உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக இத்தகைய முயற்சி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்படும் சவாலாகும் எனவே கர்நாடக அரசின் இத்திட்டத்திற்கு, இதில் தொடர்புடைய ஒன்றிய அரசின் அமைச்சகங்கள் எந்தவிதமான அனுமதியையும் வழங்க கூடாது என ஒன்றிய அரசை கேட்டுக் கொள்வதாக முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.


இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளை தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என இரண்டாவது தீர்மானமும், தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிரொப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், இக்கூட்டத்தின் தீர்மானங்களை ஒன்றிய அரசிடம் அனைத்து கட்சியினரும் நேரில் சென்று முதற்கட்டமாக வழங்குவது, அதன்பிறகு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. பிரதமரிடம் முறையிட்ட பின், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய அனைத்து கட்சிகள் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.