வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான அரசு சமுதாய வளைகாப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரிடம், அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை குறித்து கேட்டதற்கு, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வீட்டில் நடக்கிறது. அது போன்று இன்றும் நடக்கிறது. அதை நாங்கள் ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றார்.


காவிரி ஒழுங்காற்று குழு நான்கு மாநிலங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது குறித்து கேட்டதற்கு, சிரித்தபடியே, அவங்களுக்கு வேற வேலையே இல்லை எனப்  அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார். முன்னதாக அவர் பேசுகையில், “எல்லார் வீட்டிலும் தாய்மார்களுக்கு வளைகாப்பு நடைபெறுவது கஷ்டம், மிஞ்சி மிஞ்சி போனால் பொண்ணை கூட்டுபோக வருவார்கள் ஒரு சண்டையை போட்டு போயிடுவாங்க. பலபேர் இன்றைக்கு குழந்தை பெற்றுக்கொள்வதை அசிங்கம் என நினைக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லாமல் நான் கர்ப்பிணியாக இருக்கிறேன் என மாலை போட்டு வந்து அமர்ந்துள்ள உங்களை மனதார பாராட்டுகிறேன். வேலூர் மாவட்டத்தில் 1000 ரூபாய் உரிமைத்தொகை வராதவர்களுக்கு விரைவில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது” எனப் பேசினார்.