தமிழக பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் 3 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


திருவண்ணாமலை - திருக்கோவிலூர் சாலையில் உள்ள தென் மாத்தூர் கிராமத்தில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் வீடு மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவருக்கு சொந்தமான அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அருணை பொறியியல் கல்லூரி, ஜீவா வேலு மெட்ரிகுலேஷன் பள்ளி, கரண் கலைக் கல்லூரி, மகளிர் கம்பன் கலை கல்லூரி, ஜீவா வேலு பன்னாட்டு பள்ளி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் 3 வேன்களில் மற்றும் 20க்கும் மேற்பட்ட கார்களில் 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் காலை 6 மணிக்கு சோதனையில் ஈடுபட்டனர்.


மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ பாதுகாப்போடு 3 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கல்லூரி, பள்ளிகளுக்கு செல்லக்கூடிய வேலையாட்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் உள்ளே செல்லும் போது பலத்த துணை ராணுவத்தினர் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோன்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் மனைவி ஜீவா வேலு, மகன்கள் எ.வ.குமரன், எ.வ.கம்பன் மற்றும் அவர்களுடைய உறவினர்களின் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.


இந்த சோதனையை தொடர்ந்து தற்போது கரூர் காந்திபுரம் பகுதியில் உள்ள நிதி நிறுவனத்தில் தற்போது ஒரு சோதனை நடைபெற்று வருகிறது. மூன்று கார்களில் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை செய்யும் இடத்தில் மத்திய பாதுகாப்படை போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.