திருச்சியில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வருங்கால முதலமைச்சர் என சொன்ன சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கல்வி அடையாளங்களில் ஒன்றாக திகழும் ஹோலி கிராஸ் கல்லூரியில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவிகள் இக்கல்லூரியில் பயின்று வரும் நிலையில், நூற்றாண்டு விழாவில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்று மாலை 100 வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ,அமைச்சர் கே.என்.நேரு,அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ், திருச்சி மேயர் அன்பழகன், மாநகர காவல்துறை ஆணையர் காமினி, மற்றும் கல்லூரி முதல்வர் இஸபெல்லா ராஜகுமாரி , மற்றும் ஆசியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ‘100வது ஆண்டு விளையாட்டு போட்டிக்கு தகுதியான , சரியான நபரை தான் சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளீர்கள். அமைச்சர் உதயநிதி நேற்று நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற அறப்போராட்டத்தில் எழுப்பிய உரை வரலாற்று சிறப்பு மிக்கது. மனிதன் என்பவர் தெய்வமாகலாம், மற்றவர்களுக்காக உழைக்கும்போது தலைவனாகலாம் என சொல்லுக்கு உகந்தவாறு செயல்பட்டார். தொடர்ந்து செயலாளராக இருந்தவர் தற்போது எங்கள் தலைவனாக உள்ளார்.
மேலும் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதேசமயம் பொது சேவை பணியில் தொடர்ந்து முழுமையாக ஈடுபடுத்தி கொண்ட மிக பெரிய போராளி தான் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவார். பெண்கள் அதிக தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். வரும் ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தான் அதிக அளவில் கலந்து கொள்வார்கள்.
தாத்தா உருவாக்கிய துறையை பேரன் வளர்த்து வருகிறார். விளையாட்டு துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதனை பெண்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும். உழைப்பாளி, போராளி, தமிழ்நாட்டின் வருங்கால முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவார். இந்த நிகழ்ச்சியில் எதிரே உள்ள மைதானம் எப்படி காலியாக உள்ளதோ, அதேபோன்று அமைச்சர் உதயநிதிக்கு எதிரி யாரும் இல்லை.
100 ஆண்டுகளைக் கடந்த இந்த கல்லூரி என்று வரும்போது இதன் வளர்ச்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் பங்கு, குறிப்பாக அமைச்சர் கே.என்.நேருவின் பங்கு என்பது மிக முக்கியமானது. கடந்தாண்டு நடந்த நிகழ்வில் அடுத்தாண்டு நடைபெறும் நூற்றாண்டு நிகழ்வில் முதலமைச்சரை அழைத்து வருவோம் என அவர் சொன்னார். இன்றைக்கு முதலமைச்சருக்கு பல பணிகள் இருப்பதாக சொன்னாலும், வருங்கால முதலமைச்சரையே (உதயநிதி ஸ்டாலின்) அழைத்து வந்திருக்கிறார்” என தெரிவித்தார்.