டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்கப்படுகிறதா என ஆய்வு செய்து நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் மொத்தமாக 4238 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நிலையில் அடிக்கடி கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுவதாக புகார் எழுந்து வருகிறது. இத்தகைய குற்றச்சாட்டுகளில் தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் புகார்கள் குறைந்தபாடில்லை. பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.5, ரூ.10 என கூடுதல் விலை நிர்ணயிக்கப்படுவதற்கு குடிமகன்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


ஆங்காங்கே டாஸ்மாக் ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்படும் நிகழ்வுகளும் வீடியோக்களாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். குடிமகன்களுக்கு இணையாக ஊழியர்களும் பதிலுக்கு பதில் சண்டைக்கு செல்வது என தினமும் பிரச்சினைகளை  களைய அதிரடி நடவடிக்கைகளில் அரசு களமிறங்கியுள்ளது. இதனிடையே இந்த பிரச்சினையை சரிசெய்யும் பொருட்டு சில தினங்களுக்கு முன்  புதிய வசதியை டாஸ்மாக் நிர்வாகம் கடைகளில் கொண்டு வந்தது பெரும் வரவேற்பை பெற்றது.


அதன்படி டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை எவ்வளவு என்பது குறித்த பட்டியல் அடங்கிய டிஜிட்டல் போட்டு வைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 200 கடைகளில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மதுபானம் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதும், ஊழியர்கள், குடிமகன்கள் இடையே பிரச்சினைகள் ஏற்படுவது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் தெரியும்படி உத்தரவிட்டதை நிறைவேற்றவில்லை என்றும், மத்திய, மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை எடுக்க வேண்டும் எனவும்  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், ‘டாஸ்மாக் கடைகளில் அனைவருக்கும் தெரியும்படி விலைப்பட்டியல் வைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய  உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வினை மத்திய அரசின் வழக்கறிஞர்கள் குழு மேற்கொள்ள வேண்டும் என்றும், விலைப்பட்டியல் வெளியே தெரியும்படி வைக்காத கடை ஊழியர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை நாளை மறுநாள் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.