பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (ஆக.12) காலை சேலத்தில் நடைபெற்ற சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கு இந்த ஆண்டு பள்ளி செயல்பட அனுமதி ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பள்ளிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான அனுமதி ஆணைகளை வழங்கினார். 



இதனை அடுத்து கிருஷ்ணகிரியில் நடைபெறும் விழாவிற்காக, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக செல்லும் பொழுது திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் காரிமங்கலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார்.   



மருத்துவமனையில் அமைச்சர் சக்கரபாணி, திமுக மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், உள்ளிட்டோர் உள்ளனர்.


பெங்களூரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்


காரிமங்கலம் தனியார் மருத்துவமனையில் இருந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், மேல் சிகிச்சைக்காக பெங்களூர் நாராயணா ஹிருதாலயா தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


அமைச்சரின் உடல்நலக் குறைவு குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. எனினும் எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி செய்தியாளர்களிடம் பேசினார்.


வாயுப் பிரச்சினை


அவர் கூறும்போது, ''அமைச்சர் நலமாக உள்ளார். பெங்களூருவில் பரிசோதனையை முடித்துவிட்டு, சென்னை திரும்ப உள்ளார். லேசான வாயுப் பிரச்சினைதான். வேறு ஒன்றும் இல்லை'' என்று தெரிவித்தார். 


பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






அமைச்சர் நலமாக உள்ளார்


இதற்கிடையே அமைச்சர் அன்பில் மகேஸூடன் இருப்பவரும் உதயநிதி ஸ்டாலின் நல சங்கத்தின் பொருளாளர் ராஜா தமிழ் மாறன், ’’அன்பில் அண்ணன் நலம் , தற்போது காரில் தன் பயணத்தை தொடர்கிறார்’’ என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இதையும் வாசிக்கலாம்: MBBS in Hindi: அடுத்தடுத்து ஹிந்தியில் எம்பிபிஎஸ் படிப்புகள்; ம.பியைத் தொடர்ந்து இந்த மாநிலத்திலும் அறிமுகம்