மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து உத்தரகாண்டில் இந்தி மொழியில் எம்பிபிஎஸ் படிப்புகள் இந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதன்மூலம் நாட்டிலேயே இரண்டாவது மாநிலமாக உத்தரகாண்டில் மருத்துவப் படிப்புகள் இந்தியில் கொண்டுவரப்படுகின்றன.  


இதுகுறித்து ம.பி. கல்வி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் தன் சிங் ராவத் கூறும்போது, ''ஆகஸ்ட் மாதத்தின் இறுதிக்குள் உத்தரகாண்ட் மருத்துவக் கல்லூரிகளில் இந்தியில் எம்பிபிஎஸ் படிப்புகள் அறிமுகம் செய்யப்படும். 


இதற்கான பாடத்திட்டங்களை, மாநில அரசு நியமித்த மருத்துவ நிபுணர்கள் குழு தயாரித்துள்ளது. இவர்கள் ஏற்கெனவே மத்தியப் பிரதேச மாடலைப் பார்த்துவிட்டு, உத்தரகாண்ட் மாடலை உருவாக்கி உள்ளனர். இந்த பாடத்திடம் ஹேம்வதி நந்தன் பஹூஹுனா மருத்துவக் கல்வி பல்கலைக்கழகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 


இந்தி மாணவர்களுக்கு வரப்பிரசாதம்


இந்தி வழியாக பள்ளிக் கல்வியை முடித்த மாணவர்களுக்கு இந்த முன்னெடுப்பு நிச்சயம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். இந்தி பாடத்தை முறையாகக் கொண்டுவர மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரும் உத்தரகாண்ட் வருவதற்கு இசைந்துள்ளார்'' என்று அமைச்சர் தன் சிங் ராவத் தெரிவித்துள்ளார்.


2022-லேயே அறிமுகம்


மத்தியக் கல்வி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இந்திய மொழிகளை ஊக்குவிப்பதற்கான உயர் நிலைக்குழு, மாநில மொழிகளில் மருத்துவ பாடங்களை உருவாக்குவது குறித்த பேச்சுவார்த்தையை தேசிய மருத்துவ ஆணையத்துடன் நடத்தியது. அத்துடன் மாநில மருத்துவ ஆணையம், மருத்துவப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் மாநில மொழிகளில் மருத்துவம் குறித்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது. 


இந்த நிலையில் நாட்டிலேயே முதல் முறையாக, மத்தியப் பிரதேசத்தின் 13 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, உடற்கூறியல், உடலியல் மற்றும் உயிர் வேதியியல் ஆகிய மூன்று எம்பிபிஎஸ் பாடங்கள் இந்தியில் கற்பிக்கப்பட்டு வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  கடந்த ஆண்டுஅக்டோபர் 16ஆம் தேதி போபாலில் மொழிபெயர்க்கப்பட்ட எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு புத்தகங்களை வெளியிட்டார். 


இதைத் தொடர்ந்து உத்தரகாண்டில் இந்தி மொழியில் எம்பிபிஎஸ் படிப்புகள் இந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதன்மூலம் நாட்டிலேயே இரண்டாவது மாநிலமாக மருத்துவப் படிப்புகள் இந்தியில் கொண்டுவரப்படுகின்றன.  


என்ன காரணம்?


பெரும்பாலான மாணவர்கள் தங்களின் தாய்மொழிகளில் பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு, கல்லூரிக்குள் நுழைகின்றனர். அவர்களுக்கு உடனடியாக ஆங்கிலத்தில் மருத்துவக் கல்வி வழங்கப்படுவதால், கற்கத் திணறுகின்றனர். கிராமப் புறங்களைச் சேர்ந்த மாணவர்கள், தங்களின் சொந்த ஊர்களிலோ, கிராமங்களிலோ பணியாற்ற விரும்புகின்றனர். தாய்மொழி மூலம் மருத்துவக் கல்வியை அளிப்பதன்மூலம் கிராமங்களில் மருத்துவ வசதிகளை வழங்க முடியும். எனினும் இதன் மூலம் மருத்துவக் கல்வியின் தரம் பாதிக்கப்படாது என்று இந்திய மொழிகளை ஊக்குவிப்பதற்கான உயர் நிலைக் குழுவின் தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி தெரிவித்திருந்தார் 


தமிழ்நாட்டில் எப்படி?


தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் மருத்துவப் பாடங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணியை கடந்த ஆண்டே  நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.