கொரோனா தொற்றின் 2 வது அலை மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா  தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், அவர்களுக்கான சிகிச்சை அளிப்பதற்காக கூட மருத்துவமனையில் இடம் இல்லாத நிலை நீடிக்கிறது. இது ஒருபுறம் இருக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு மருந்து பற்றாக்குறை, ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனைச் சரிசெய்ய பல்வேறு வழிமுறைகளை அரசு மேற்கொண்டுவந்தாலும் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளால் இதனை முறையாக சரி செய்ய முடியவில்லை என்றே கூறலாம்.

இந்த சூழலில்தான் மக்களின் மருத்துவ தேவைகளை நிவர்த்திசெய்யும் வகையில் பல தன்னார்வலர்கள், தங்களது ஆட்டோ, கார் போன்றவற்றை ஆக்சிஜன் வசதியுடன் கூட ஆம்புலன்ஸாக மாற்றி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ஹரியானா மாநிலத்தில் பஞ்ச்குலா மாவட்டத்தில், போக்குவரத்து பணிமனையில் உள்ள 5 மினி பேருந்துகள் ஆம்புலன்ஸாக மாற்றப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு மருத்துவமனைகளுக்கு செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு பயன்படும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ஆம்புலன்ஸில் 4 படுக்கைகள் மற்றும் 2 ஆக்ஸிஜன் சிலிண்டர் வைக்கப்பட்டுள்ளது.

 



இதோடு மட்டுமில்லாமல் ஆம்புலன்ஸாக மாறியுள்ள இந்த பேருந்தினை, பஞ்ச்குலா பணிமனையில் உள்ள ஓட்டுநர்கள் இயக்குவார்கள் என அப்பணிமனையில் மேலாளர் வினய் குமார் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆம்புலன்சில் ஒட்டுநருடன் ஒரு செவிலியர் மற்றும் பாரா மெடிக்கல் பணியாளர்கள் உடன் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆபத்தில் உள்ள மக்களையும் முதலுதவி வழங்கி மருத்துவமனையில் சேர்ப்பதற்கு உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.


ஹரியானா மாநிலத்தைப்பொறுத்தவரை, கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக ரூ.35 ஆயிரம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் அறிவித்துள்ளார். இதோடு கொரோனா தொற்று  பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவருக்கு ஹரியானா முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார். இதன்படி கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களுக்கு   நாள்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்பதோடு, அதிகபட்சமாக 7 நாள்களுக்கு என ஒரு நபருக்கு ரூ.35 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 



இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனாவின் காரணமாக 4,205 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 3,48,421 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,55,338 பேர் குணமடைந்துள்ளனர். குறிப்பாக இதுவரை நாடு முழுவதும் 17,52,35,991 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.