அறிகுறியுடன் கூடிய கொரோனா இருப்பவர்கள் குப்புறப்படுத்து ஓய்வு எடுக்க வேண்டும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.


சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இந்த தொற்றால் ஏராளாமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது.



கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.





மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் பகுதி நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.


இந்நிலையில், அறிகுறியுடன் கூடிய கொரோனா நோய் இருப்பவர்கள் குப்புறப்படுத்து ஓய்வு எடுக்க வேண்டும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.


இதுதொடர்பாக மாநகராட்சி, அறிகுறிகளுடன் கூடிய கொரோனா தொற்று இருப்பவர்கள் குப்புறப்படுத்து ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், 2 முதல் 4 மணி நேரம் இடைவெளியுடன் அதிகபட்சம் 16 மணி நேரம் வரை குப்புறப்படுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.


மேலும்,’கடின உழைப்பை தவிர்த்து, வீட்டில் தனி அறையில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். டாக்டர் பரிந்துரைப்படி Ivermectin, Azithromycin, Ranitidine மாத்திரைகளை உட்கொள்ளலாம். பாரசிட்டாமல் (500 மி.கி.) மாத்திரைகளை ஒருநாளைக்கு 4 முறை உட்கொள்ள வேண்டும். இணை நோய்கள் ஏதேனும் இருந்தால் அதற்கான மாத்திரைகளை தொடர்ந்து எடுக்க வேண்டும். தொடர்ச்சியான காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இருந்தால் மருத்துவமனை செல்ல வேண்டும்’ எனக் கூறியுள்ளது.


மருத்துவ தேவைகளுக்கு மாநகராட்சி மருத்துவர்களை தொடர்புகொள்ள தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. 044- 25619263, 25384520, 46122300 ஆகிய எண்களில் மாநகராட்சியை தொடர்பு கொள்ளலாம்.