அதிமுக பொதுச்செயலாளர் என்றாலே நம் நினைவுக்கு வருவது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தான். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் என்றால் சுவாரசியங்களும் நிறைந்ததாக தான் இருக்கும்.


அண்ணாவின் மறைவிற்கு பின் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எம்.ஜி.ஆர் அதிமுக என்ற தனி கட்சியை தொடங்கினார். அவர் அதிமுகவை துவக்கிய பின் 1972 ஆம் ஆண்டு முதல் 1978 வரை அதிமுகவில் பொதுச்செயலாளராக இருந்தார். அதன்பின் 1980ஆம் ஆண்டில் ஆட்சிப்பணிக்கும், அரசுப்பணிக்கும் அதிக நேரம் தேவைப்படுவதால் கட்சியின் பொதுச்செயலாளராக நாவலர் நெடுஞ்செழியனை நியமனம் செய்தார். இவரை தொடர்ந்து ப.உ. சண்முகம் 4 ஆண்டு 215 நாட்கள் பொதுச்செயலாளராக பதவி வகித்தார். பின்னர் ராகவானந்தம் ஒரு ஆண்டு 216 நாட்கள் பொதுச்செயலாளராக பதவி  வகித்தார். இந்த நியமனங்களை எல்லாம் பொதுக்குழுவின் ஒப்புதலுடனே எம்.ஜி.ஆர் மேற்கொண்டார்.


1987ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பின் அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணியாக பிரிந்தது. 1989ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா அணியை சேர்ந்த 28 பேர் எம்.எல்.ஏக்களாக தேர்வு செய்யப்பட்டு ஜெயலலிதா எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்றார். அதன்பின் அதிமுக, ஜெயலலிதா வசம் வந்தது. அதனை தொடர்ந்து அவர் அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.


2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் ஓ பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்றார். மேலும் ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி என அழைக்கப்படும் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக்கொள்ளும்படி பொதுகுழுவில் கேட்டுக்கொள்ளப்பட்டதால் சசிகலா பொதுச்செயலாளராக பதவி ஏற்றார். ஓபிஎஸ் மற்றும் பொதுச்செயலாளர் சசிகலா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். பின்னர் சசிகலா சிறைக்கு சென்றதால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக அறிவிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.  2017ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு  4 அண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறைக்கு செல்லும் முன் டிடிவி தினகரனை சசிகலா துணைப் பொதுச்செயலாளராக அறிவித்தார்.


தனி அணியாக ஓபிஎஸ் சென்ற பின் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓபிஎஸ்ஸிற்கும் இணக்கும் ஏற்பட்டு ஒன்றாக இணைந்தனர். மேலும் ஓபிஎஸ் துணை முதலமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். அதையடுத்து 2017 செப்டம்பரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவையும், துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தினகரனையும் நீக்கினர். ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்வு செய்யப்பட்டனர்.


2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த பின் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி இடையே மீண்டும் கருத்து மோதல் வெடித்தது. கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்குழு நடைப்பெற்றது. அதில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் எடப்பாடி பழனிசாமியால் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.


வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது பொதுக்குழு செல்லும் என கூறி  ஓபிஎஸ் தரப்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனடிப்படையில் இன்று எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுகவில் இந்த தீர்ப்பு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளை கடந்து எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் 7வது பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.