அதிமுக பொதுச்செயலாளராக தன்னை தேர்வு செய்த தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். 


எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர்களான பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் வழங்கினர். இதனை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளது. அதிமுக தலைமை கழகத்தில் ஏராளமானோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தனர். முன்னதாக அங்கிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ”அனைத்திந்திய அதிமுக தொண்டர்களால் கழக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். அதற்காக அதிமுகவின் அனைத்து தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முடிவை அறிவித்து விட்டார்கள். அந்த தருணத்தில் இருந்து நான் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்” என தெரிவித்தார். 


அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு, பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு என கிட்டதட்ட 9 மாதங்களாக எதிர்பார்த்து காத்திருந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  


அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல்


அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்தது. இதில் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது உள்ளிட்ட சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் இந்த பொதுக்குழுவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாகவும், இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு கொண்ட அமர்வு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வழங்கியது. 


இந்த சூழலில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் தன் தரப்பு வாதங்களை முன் வைத்தார். ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி. அதேசமயம் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் பொதுக்குழு தீர்மானங்கள் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. 


இதனால் பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு வெளியானது. இதில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்புமனு கொடுத்திருந்ததால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் சூழல் உருவானது. ஆனால் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்தும் ஓபிஎஸ் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்குகளில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.