பணிநிரவல் செய்யப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு  4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் உடனடியாக  அரசு ஊதியம் வழங்க வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.


பணி நிரவல் கலந்தாய்வு


அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் பற்றாக்குறையைச் சரிசெய்யும் வகையில் ஆசிரியர்களைப் பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக வழக்கமாக நடைபெறும் ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு, ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பணியிட மாறுதல் மற்றும் பணிநிரவல் அரசாணை கடந்த டிசம்பர் 17ஆம் தேதி வெளியிடப்பட்டது.


மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு விலக்கு


இந்த அரசாணை மாற்றுத்திறனாளி ஆசிரியர்களின் நலன்களுக்கு எதிராக இருப்பதாகவும், உடனடியாக தமிழக முதல்வர் இதில் தலையிட்டு, உரிய தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் முதல்வருக்குக் கடிதம் எழுதியிருந்தது.


இதை அடுத்து, பணி நிரவல் மாற்றத்தில் இருந்து (excess staff teachers transfer) மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுரை வழங்கி உத்தரவு பிறப்பித்தது.


இதற்கிடையே பணிநிரவல் செய்யப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு  4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் உடனடியாக  அரசு ஊதியம் வழங்க வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:


''தமிழ்நாட்டில் 29.11.2022-ஆம் நாள்  நடத்தப்பட்ட பணி நிரவல் கலந்தாய்வு மூலம் பல்வேறு பள்ளிகளில் அமர்த்தப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு  இன்று வரை ஊதியம் வழங்கப்படவில்லை. பணி செய்த  ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது சரியல்ல. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது!


பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களில்  பெரும்பான்மையினர் குடும்பத்துடன் புதிய பணியிடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்; சிலர்  தனியாக வாழ்ந்து வருகின்றனர். அதேநேரத்தில் 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில்  அவர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்!


பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை முறையில் (IFHRMS) பதிவேற்றம் செய்யப்படாததுதான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம். ஆசிரியர்களின் விவரங்களை பதிவு செய்ய இவ்வளவு காலம் ஆவதை ஏற்றுக்கொள்ள முடியாது!


மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலன்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் விவரங்களை ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை முறையில்  பதிவேற்றம் செய்ய வேண்டும். அவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்''.


இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.