எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாளை ஒட்டி அதிமுக தலைவர்கள் எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோர் அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி ட்வீட் வெளியிட்டுள்ளனர்.


எம்ஜிஆர்


திமுக-வில் அறிஞர் அண்ணாவின் கீழ் தீவிரமாக செயல்பட்டு வந்தது மட்டுமின்றி சினிமா மூலமாக கட்சியினை மக்களிடையே சென்று சேர்த்து தானும் பிரபலமடைந்து வாத்தியார் என்னும் பெயரை மக்கள் மனதில் இடம்பிடித்து ஏழைப்பங்காளனாக திகழ்ந்த எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவர் பின்னர் திமுக வில் இருந்து பிரிந்து சென்று அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று புதிதாக கட்சி துவங்க, சந்தித்த முதல் தேர்தலிலேயே வென்று ஆட்சியமைத்தது மட்டுமின்றி சாகும் வரை முதல்வராக இருந்தார். மூன்று முறை தொடர்ந்து வென்று அசைக்கமுடியாத தலைவராக இருந்த அவர் சத்துணவு திட்டம் முதலிய திட்டங்களுக்காக அறியப்படுகிறார்.






தற்போதைய அதிமுக


அவர் கட்டி காத்த கட்சியினை பின்னர் ஜெயலலிதா விடம் விட்டுச்சென்றார். தற்போது எடப்பாடி, ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையின் கீழ் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இன்று அவரது பிறந்தநாள் என்பதால் கட்சியை சேர்ந்தவர்கள் அவர்களது புகைப்படத்திற்கு மரியாதை செலுத்துவது வழக்கம். இதில் முதலாவதாக தற்போது அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமாக செயல்பட்டுவரும், எடப்பாடி கே. பழனிச்சாமி எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாளான இன்று அவரது பெரும் புகழையும் பெருமையையும் போற்றி வணங்குவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: Jallikattu: சீறும் காளைகள்.. தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார் உதயநிதி..!


இபிஎஸ் ட்வீட்


அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கலங்கரை விளக்கமாக இருந்து தமிழகத்தை கரை சேர்த்த காவியத் தலைவர், சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகர், வாழ்வு தந்த வள்ளல், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழையும் பெருமையையும் போற்றி வணங்குகிறேன்", என்று எழுதி உள்ளார். அதோடு தான் எம்ஜிஆர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யும் புகைப்படத்தையும் சேர்த்து வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி மக்களுக்கு இனிப்புகள் வழங்கி வருகிறார்.






ஓபிஎஸ் ட்வீட்


இவரைத்தொடர்ந்து, அவரது வழியில் ஒற்றுமையாய் செயல்படுவோம் என தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ட்விட்டர் பதிவில், "தனது கடும் உழைப்பாலும், விடா முயற்சியாலும் வானளவு உயர்ந்து, நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து, பொதுவாழ்க்கையில் முதலமைச்சராக பல சரித்திர திட்டங்களை நிறைவேற்றி, மக்கள் மனதில் நீங்காது வாழும் புரட்சித்தலைவர் #MGR அவர்களின் 106-வது பிறந்தநாளில் அன்னாரது வழியில் ஒற்றுமையாய் செயல்படுவோம்!", என்று ஓபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை, கிண்டியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் செந்தில்குமார், செய்தித்துறை செயலாளர் செல்வராஜ், செய்தித்துறை இயக்குனர் ஜெயசீலன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.