பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழ்நாடு முழுவதிலும் இன்று மட்டும் (17/01/2023) 4 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. 


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் கடந்த ஜனவரி 12-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  இதில் ஜனவரி 12, 13, 14-ம் தேதிகளில் 6,183 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 16,932 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் தமிழ்நாடு முழுவதும் இருந்து சொந்த ஊருக்கு பல லட்சம் மக்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்றனர். மேற்குறிப்பிட்ட தேதிகளில் சொந்த ஊருக்குச் சென்ற மக்கள் இன்று முதல்  அதிகப்படியான மக்கள் சென்னை உள்ளிட்ட தொழில் நகரங்களுக்கு திரும்பவுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை மாநிலம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளது. 


இந்நிலையில், பொங்கல் பண்டிகை முடிந்து நேற்றே குறிப்பிடும் படியான அளவிலான மக்கள்  பலரும் ஊர் திரும்பத் தொடங்கியுள்ளனர். இதையொட்டி, சென்னைக்கு மட்டும் ஜனவரி 16, 17, 18-ம் தேதிகளில் நாள்தோறும் வழக்கமாக  இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,334  கூடுதல் சிறப்பு பேருந்துகளும், தமிழ்நாட்டில், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட  மற்ற பகுதிகளுக்கு  4,965 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 15,599 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. 


இதில், நேற்று (ஜனவரி,16) சென்னைக்கு அன்றாடம்  இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 1,187 சிறப்பு பேருந்துகளும், தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு 1,525 சிறப்பு பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல, இன்று (ஜனவரி,17) சென்னைக்கு இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 1,941 சிறப்பு பேருந்துகளும், மற்ற பகுதிகளுக்கு 2,061 சிறப்பு பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்பும் மக்களின் வசதிக்காக சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதிலும் இன்று மட்டும் 4 ஆயிரத்து 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


காணும் பொங்கல் ஏற்பாடு


சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள அதிக மக்கள் கூடும் பகுதிகளான கடற்கரை, வண்டலூர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மக்கள் சென்று திரும்ப வசதியாக 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரை, அண்ணா சதுக்கம், வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம், பெசண்ட் நகர், குயின்ஸ் லேண்ட், கோவளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 480 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. 


மேலும், ஜனவரி 18ஆம் தேதி அதாவது நாளை பொங்கல் விழா விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களுக்கு ஏதுவாக இருக்க, கூடுதலாக 125 சிறப்பு கூடுதல் பேருந்துகள் இயக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. 


மேலும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான காடற்கரை, வண்டலூர் பூங்கா உள்ளிட்ட இடங்கள் உட்பட மாநகர் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.