தமிழர்களின் அடையாளமான பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே எப்போதும் நமது நினைவில் இருப்பது ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆகும். புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்த நிலையில் உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் சற்று முன் தொடங்கியுள்ளது.
இந்த புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமாகிய உதயநிதி ஸ்டாலின் பச்சை கொடி காட்டி தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ள உதயநிதி ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று மதுரை வந்தடைந்தார்.
ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முதலில் கோவில் காளைக்கு பூஜை செய்யப்பட்டு அவிழ்க்கப்பட்டது. இதையடுத்து, போட்டியில் பங்கேற்கும் காளைகள் வாடிவாசலில் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்க்கப்பட்டது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். அமைச்சர்களும், முக்கிய பிரமுகர்களும், ஆயிரக்கணக்கான மக்களும் குவிந்துள்ளதால் அலங்காநல்லூர் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். மேலும், மாடுபிடி வீரர்களும் முறையான மருத்துவ ஆவணங்கள் வைத்துள்ளனரா? என்று பரிசோதித்தனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாகவும், அமைதியாகவும் நடைபெறுவதற்காகவும் அலங்காநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்காக அலங்காநல்லூர் வரும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்காக சிறப்பு மாடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போட்டியை பார்ப்பதற்காக அதிகாலை முதல் பொதுமக்கள் ரசிகர்கள் மாடத்தில் குவிந்துள்ளனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் ஒரு காரும், யாருக்கும் பிடி கொடுக்காமல் முதலிடம் பிடிக்கும் காளைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் ஒரு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது. முன்னதாக, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மதுரை வந்த உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பாவான மு.க.அழகிரியை நேரில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.