கொடைக்கானலில் இயங்கி வந்த தனியார் நிறுவன வளாகத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளில் பாதரசம் கலந்திருப்பதால், அவை மழைக்காலங்களில் நீரில் கரைந்து நீர்நிலைகளுக்கு சென்று சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் டெல்லியில் உள்ள முதன்மை அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த 2018-ம் ஆண்டு வழங்கப்பட்டதீர்ப்பில் சில தொழில்நுட்பரீதியிலான வழி காட்டுதல்களைப் பின்பற்றி அப்பகுதியை சீரமைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த உத்தரவைப் பின்பற்றாமல் தனியார் நிறுவனம் சீரமைப்பு பணிகளை மேற்கொள்கிறது.


அபாயகரமான கழிவுகள் கொடைக்கானல் வன உயிரின சரணாலய பகுதியில் கொட்டப்பட்டு, மழைக் காலங்களில் கரைந்து பாம்பார் சோலை வழியாக வைகை ஆற்றில் கலந்து சுற்றுச்சூழல் பாதிப்பைஏற்படுத்துகிறது. நிறுவன வளாகத்தில் உள்ள மண் அதிக அளவில் பாதரசம் கலந்துள்ளதால், அங்கிருந்து வெளியேறும் நீரை முறையாக சுத்திகரிக்காமல் நீர்நிலைகளில் விட்டாலோ அல்லது ஏதேனும் இடத்தில் கொட்டினாலோ அது சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கும் என நாளிதழ்களில் கடந்த ஆண்டு செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வந்தது.
தொடர்புடைய நிறுவன வளாகத்தில் மண்ணில் உள்ள பாதரசத்தைப் பிரித்தெடுத்து சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்த மத்திய மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விஞ்ஞானிகள் கொண்ட கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு தேசிய பசுமைதீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகளைப் பின்பற்றி முறையாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்கிறதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.


இந்நிலையில் இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் கடந்த 19-ம் தேதி விசாரணைக்கு வந்தது.அப்போது அமர்வின் உறுப்பினர்கள் வழங்கிய தீர்ப்பில் பல்வேறு அறிக்கைகள், ஆய்வு முடிவுகள் மற்றும் வாதங்கள் அடிப்படையில் ஒரு கிலோ மண்ணில் 20 மில்லி கிராம் அளவு வரை பாதரசம் இருக்கலாம் என நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் மண்ணில் உள்ள பாதரசத்தை நீக்குவது தொடர்பாக, வல்லுநர் குழு அறிக்கைப்படி, மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தொடர்புடைய நிறுவனம் தனது வளாகத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.


விதிகளை முறையாகப் பின்பற்றி பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா என மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தொடர்புடைய நிறுவனம், மேற்கூறிய வாரியங்களில் முறையாக அனுமதி பெற்றுபணிகளை மேற்கொள்ள வேண்டும். இப்பணிகளுக்காக மரங்களை வெட்டுவதாக இருந்தால் வனத்துறை அனுமதி பெற்று, ஒரு மரத்துக்கு ஈடாக 10 மரக்கன்றுகளை, வனத்துறை வழிகாட்டுதலோடு நட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.