கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்ய இயந்திரங்கள் பயன்படுத்துவதை உறுதி செய்வதுடன், தூய்மைப் பணியில் ஈடுபடுவோருக்குச் செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்ட பாதுகாப்பு உடைகள் வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கை:


மதுரையில் மாநகராட்சி கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தபோது நச்சுக்காற்று தாக்கி 3 ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். உயிரிழந்த மூவரில் மதுரை மாடக்குளம் பகுதி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அன்புத்தம்பி சரவணனும் ஒருவர் என்ற செய்தி துயரத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.


கழிவு நீர்த்தொட்டிகளைச் சுத்தம் செய்ய இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டுமென்று தொடர்ந்து பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். இருந்தும் அதுகுறித்து ஆளும் அரசுகள் எவ்வித அக்கறையும் செலுத்தாது, அலட்சியம் செய்ததன் விளைவே தற்போது மேலும் மூன்று உயிர்கள் பறிபோக முக்கியக் காரணமாகும். ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கவும், பணம் எடுக்கவும், குளிர்பானங்களைப் பெறவும் இயந்திரங்கள் வந்துவிட்ட எனது நாட்டில் மனிதக் கழிவுகளை அள்ளவும், பாதாளச் சாக்கடையைத் தூய்மைப்படுத்தவும், மனிதர்கள் இறங்கி தங்கள் கைகளால் செய்ய வேண்டி இருப்பதென்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத பெருங்கொடுமையாகும். மனிதர் கழிவுகளை மனிதரே அள்ளி மரணிக்கச் செய்துவிட்டு; சந்திரனுக்கும், செவ்வாய்க் கிரகத்திற்கும் விண்வெளி ஓடங்களை அனுப்புவதையும், கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைகள் தயாரிப்பதையும் வளர்ச்சி என்று வாய்கூசாமல் பேசுவதை எவ்வாறு ஏற்க முடியும்?


மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்தைத் தடுக்கக் கடந்த 1994 ஆம் ஆண்டு 'தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையம்' உருவாக்கப்பட்டதுடன், கடந்த 2013ஆம் ஆண்டு மனிதக் கழிவுகளை மனிதர்களே கையால் அள்ளுவதற்குத் தடை விதித்துச் சட்டத் திருத்தமும் கொண்டுவரப்பட்டது. இருந்த போதிலும் இன்றுவரை தமிழ்நாட்டில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பொருளாதாரத் தேவைக்காக இப்பணிகளில் ஈடுபடுகின்றனர் என்பது மிகுந்த வேதனைக்குரிய உண்மையாகும்.


ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் 50 முதல் 100 பேர் வரையிலும், தமிழ்நாட்டில் 5 முதல் 10 பேர் வரையிலும் கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணியின் போதே உயிரிழந்து வருகின்றனர். ஒவ்வொருமுறையும் கழிவு நீர்த்தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி உயிரிழப்பதும், அரசு நிதியுதவி அளிப்பதோடு கடந்து செல்வதும் தொடர்கதையாகிவிட்டது.


ஆகவே, தமிழ்நாடு அரசு இதற்கு மேலாவது விழிப்படைந்து, மனிதக் கழிவுகளை அகற்றவும், பாதாளச் சாக்கடைகளைச் சுத்தம் செய்யவும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதைத் தீவிரமாகக் கண்காணித்து உறுதிசெய்ய வேண்டுமெனவும், சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவோருக்குச் செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்ட நவீன உடைகள் உட்பட அனைத்துப் பாதுகாப்புக் கருவிகள் வழங்கப்பட வேண்டுமெனவும், மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ள பணியமர்த்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.


மேலும், தற்போது மதுரை மாநகராட்சி கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியின்போது உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கும் தலா 1 கோடி ரூபாயை துயர் துடைப்பு உதவியாக வழங்க வேண்டுமெனவும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண