சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்படும் அந்நாட்டின் முதல் பிரதமரான லி குவான்யூவுக்கு தமிழ்நாட்டில் நினைவுச் சின்னம் எழுப்பப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 


சிங்கப்பூர்:


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக  சிங்கப்பூர் சென்றுள்ளார். தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்தாண்டு  ஜனவரியில் நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு மாநிலத்திற்கு தொழில்துறை முதலீடுகளை ஈர்க்கும் வகையில்  முதலமைச்சர் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அங்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


தொடர்ந்து இன்று காலை சிங்கப்பூர் முன்னணி தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அந்நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஈஸ்வரம் ஆகியோரை சந்தித்து பேசினார். 


தமிழ் இனத்தின் வேர்:


இதனையடுத்து சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாட்டிற்கும் சிங்கப்பூருக்கும் இடையேயான தொடர்பு குறித்து பேசினார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர்,  “இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தான் தொடங்க வேண்டும் என நான் சொல்லி வருகிறேன். தமிழினத்தின் பெருமையை மீட்கும் அரசாக திமுக அரசு அமைந்துள்ளது. சிந்து பண்பாடு என்பது 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. தமிழினத்தின் வேர் என்பது தமிழ்நாட்டுடன் முடிவடைவது அல்ல.


அது பல நாடுகளுக்கும்  பரவி இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. அத்தகைய பாரம்பரியத்தின் சின்னமாக சிங்கப்பூரின் தமிழர்களாகிய நீங்களும் இருக்கிறீர்கள். சிங்கப்பூருக்கும் தமிழ்நாட்டும் இடையே தொடர்பு என்பது 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சிங்கப்பூர் குடிமக்களாகிய தமிழ் மக்கள், அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. 


சிங்கப்பூர் தந்தைக்கு தமிழ்நாட்டில் நினைவுச்சின்னம்:


சாதாரண நிலையில் இருந்த சிங்கப்பூரை உலகம் போற்றும் நாடாக  இந்நாட்டின் பிரதமர்கள் மாற்றி காட்டினார்கள்.லி குவான்யூவின் புகழ் இன்று வரை நீடித்து கொண்டிருக்கிறது. இந்திய வணிகத் தொடர்பை அவர் வளர்த்தார். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை நோக்கி சிங்கப்பூர் நிறுவனங்களை ஈர்ப்பதற்காக நான் இங்கு வருகை தந்திருக்கிறேன். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில் நடக்க உள்ளது. தொழில் முதலீட்டாளர்களாக உள்ள தமிழர்கள் இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். 


சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் லி குவான்யூ தான் தமிழுக்கும், தமிழர்களுக்கும் உயர்வு கிடைத்திருக்கிறது. அவர் இறந்த போது சிங்கப்பூரின் நாயகன்  என புகழ்ந்தார் கருணாநிதி. அத்தகைய லீ குவான் யூக்கு தமிழ்நாட்டில் நினைவுச்சின்னம் அமைக்க முடிவு செய்துள்ளோம். இது தமிழ்நாட்டில் மன்னார்குடியில் அமைய உள்ளது. சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பாலானோர் மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள். எனவே லீ குவான் யூ பெயரில் நூலகமும், சிலையும் மன்னார்குடியில் அமையும் என தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.