ஆதிபராசக்தி பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச்சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. 


தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஆன்மீகவாதிகளில் ஒருவரான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் ஆதிபராசக்தி கோயிலின் சித்தர் பீடத்தின் ஆன்மீக குருவாக இருந்து வந்தார். அவரை பக்தர்கள் அன்போடு “அம்மா” என்றழைப்பது வழக்கம்.  82 வயதான பங்காரு அடிகளார் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக கோயில் வளாகத்திலேயே சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே நேற்று (அக்டோபர் 19) மாலை 5 மணியளவில் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. 


ஆதிபராசக்தி கோயில் சித்தர் பீடத்தின் கருவறைக்குள் பெண்களே சென்று பூஜை செய்யலாம் என்கின்ற முறையை உருவாக்கி ஆன்மீகத்தில் பெரும் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார். பல்வேறு மருத்துவம் மற்றும் கல்வி நிறுவனங்களை தொடங்கி ஏழை மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் கல்விச் சேவை ஆற்றியதால் அவரது புகழ் உலகமெங்கும் பரவியது. இப்படியான நிலையில் பங்காரு அடிகளார் மறைவு தமிழ்நாடு மக்களையும், உலகம் முழுவதும் இருக்கும் ஆதிபராசக்தி கோயில் பக்தர்களையும் அதிர்ச்சியிலும்,சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. பலரும் நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


அவரது உடல் மேல்மருவத்தூரில் உள்ள அடிகளார் தெருவில் அமைந்துள்ள பங்காரு அடிகளார் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.  இரவையும் பொருட்படுத்தாது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இன்று காலையில் மேலும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 


கருவறை அருகே பங்காரு அடிகளார் அருள்வாக்கு கூறிய இடத்தில் சமாதி கட்டும் பணி தீவிரம்.



 தற்பொழுது வீட்டில் வைத்திருக்கும் அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டிலிருந்து உடல் கோவில் அருகே உள்ள இடத்தில் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார் என எதிர்பார்ப்பதால் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து இன்று மாலை  5 மணிக்கு  அவருக்கு இறுதி சடங்கு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் கருவறை அருகே உள்ள அருள்வாக்கு கூறி வந்த இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட உள்ள நிலையில் நினைவிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இதற்கிடையில் பங்காரு அடிகளார் மறைவையொட்டி மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடைகள் அனைத்தும் இன்று அடைக்கப்படும் என வணிகர் சங்கமும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.