தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் கலந்துக்கொள்ளும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.


தமிழ்நாட்டில் டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபு கடந்த 30 ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். அதனை தொடர்ந்து சென்னை காவல்துறை ஆணையராக இருந்த சங்கர் ஜிவால், தமிழ்நாடு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார். தமிழக சட்ட-ஒழுங்கு துறையின் 32வது டிஜிபி ஆக சங்கர் ஜிவால் பொறுப்பேற்றார். முன்னதாக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக அருணும், சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோரும் பொறுப்பேற்றனர்.


பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய சங்கர் ஜிவால் “பொதுமக்கள் மற்றும் போலீஸ் இடையேயான உறவை மேம்படுத்த முயற்சிப்பேன். போலீசார் ஒரு துறையை சேர்ந்தவர்களாக செயல்பட்டு வருகின்றனர். வருங்காலத்தில் மனித உணர்வுகளுடன் சேர்ந்து போலீசார் தங்களது பணியை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். காவல் நிலையங்களுக்கு வரும் மக்களின் கோரிக்கைகளை முறையாக பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. போலீசாரின் நலனுக்கான விடுமுறை, மருத்துவ பலன்கள் மற்றும் வீட்டு வசதி ஆகியவற்றை மேம்படுத்த உள்ளோம். சாலை விபத்துகள் அதிகம் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, அங்கு விபத்துகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம். சாலை விபத்து மரணங்கள் கடந்த 2 ஆண்டுகளில் குறைந்துள்ளது. அதை மேலும் குறைக்க பணிகள் முன்னெடுக்கப்படும். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொதுமக்களிடம் கோரிக்கைகளை பெறுவது, அவர்களது புகார்களின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதை அறிவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சரின் எதிர்பார்ப்பின் பேரில் காவல்துறை சிறப்பாக செயல்படும்” என உறுதியளித்தார்.


புதிய அதிகாரிகள் பொறுப்பேற்று சில நாட்களே ஆகும் நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலர் அமுதா, சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால், புதிதாக பொறுப்பேற்ற சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண், உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர், பிற மாநகர காவல் ஆணையர்கள், சரக ஐஜிக்கள், டிஐஜிக்கள், மாவட்ட எஸ்பிக்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொள்கின்றனர்.


தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் செயின் பறிப்பு, கொலை, கொலை முயற்சி, திருட்டுச் சம்பவங்கள், சாலை விபத்துக்கள், லாக் அப் டெத் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


CM Stalin Letter To President: முதலமைச்சர் ஸ்டாலின் செய்த சம்பவம்... குடியரசு தலைவர் முர்மு என்ன செய்யப்போகிறார்? ஆளுநரின் அடுத்த மூவ் என்ன?