கூலிப்படைகளை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி செங்கல்பட்டில் பா.ம.க. தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று அதாவது ஜூலை 11ஆம் தேதி போராட்டம் நடைபெறுகிறது.



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 



”செங்கல்பட்டு மணிக்கூண்டு அருகே பா.ம.க. நகர செயலாளர் பூக்கடை நாகராஜ் என்பவர் கூலிப்படையினரால் முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், பா.ம.க.வினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நிகழ்ந்துள்ள இக்கொலை அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டுகிறது. 


மறைமலைநகர் பகுதியில் பா.ம.க. நிர்வாகி மனோகரன், வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் காட்டூர் காளிதாசன் மற்றும் செங்கல்பட்டில் பூக்கடை நாகராஜ் என கடந்த மே  மாதம் 22ஆம்  தேதியில் இருந்து இப்போது வரையிலான 50 நாட்களில் பா.ம.க. நிர்வாகிகள் 3 பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.


அதேபோல், செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் லோகேஷ் என்பவர் கொடூரமான முறையில் நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார்.  கடந்த ஆறு மாதங்களில் மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடத்தப்பட்டுள்ளன. அனைத்திலும் கூலிப்படையினர் சம்பந்தப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் கூலிப்படையினரின் கூடாரமாக மாறி வரும் நிலையில், கூலிப்படையினரின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறை வேடிக்கை பார்க்கிறது.


இதனைக் கண்டித்தும் கூலிப்படையினரை முழுமையாக ஒழிக்கவும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு நகரம் அம்பேத்கர் சிலை அருகில் பா.ம.க. சார்பில் 11-ந்தேதி (இன்று) காலை 11 மணிக்கு மாபெரும் போராட்டம் நடத்தப்படும். அப்போராட் டத்திற்கு பா.ம.க. தலைவரான நானே தலைமையேற்கிறேன்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 


செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு நகரில்,  மணிகூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்தவர்  பாமக வடக்கு நகர செயலாளர்  நாகராஜ். இவர் நேற்று முந்தினம் அதாவது ஜூலை 9ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் மர்ம நபர்களால் வெட்டிப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவம் குறித்து தகவல் தெரிந்த செங்கல்பட்டு நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, சென்று உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர். உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

 

தீவிர தேடுதல் வேட்டை

 

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உடனடியாக இச்சம்பவம் குறித்து 8 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையின் போது, கொலை குற்றவாளிகள் பரனூர் வழியாக சென்றதாக, வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது புலிபாக்கம் பகுதியில் ரயில்வேபாதை அருகே சந்தேக நபர் செல்வதாக, அறிந்து காவல்துறை அந்த நபரை கைது செய்ய முயன்ற போது காவல்துறையை தாக்க முயற்சித்த செங்கல்பட்டு,  சின்னநத்தம் பகுதியை சேர்ந்த அஜய் என்கிற நபரை காவல் துறை துப்பாக்கியால் இடது கால் பகுதியில் சுட்டனர்.

 

பாதுகாப்பு பணி

 

இதனால்  நிலை தடுமாறிய அஜயை காவல்துறையினர் கைது செய்து சிகிச்சைக்காக, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சை அளிக்கப்பட்டு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில், பலத்த காயமில்லை என காவல்துறை அறிந்து, அவரை உள் நோயாளியாக அனுமதித்து காவல்துறையின் பலத்த காவல் பாதுகாப்புடன் வைத்துள்ளனர். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், டிஎஸ்பி ஜூலியஸ் சீசர் தலைமையில் ஆய்வாளர்கள் வெற்றிச்செல்வன் சத்தியவாணி ஆகியோர் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.